
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ரஞ்சித் பாண்டே என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நீலிமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு மணமகளை பெண் ஒருவர்தான் ஏற்பாடு செய்தார்.
அப்பெண் ரஞ்சித் வீட்டில் மணமகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், திருமணம் செய்து வைக்க பணம் இல்லை என்றும் கூறினார். இதனால் ரஞ்சித் குடும்பத்தினர் அப்பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் கொடுத்து மணமகள் வீட்டில் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
திருமணமும் கோலாகலமாக முடிந்த அன்று இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உடனே அப்பெண் தானே பால் காய்ச்சி தனது மாமியாருக்கு ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு தனது கணவனுக்கும் எடுத்துச்சென்றார். ஆனால் பாலை குடித்த கணவனும், மாமியாரும் சிறிது நேரத்தில் மயங்கிவிட்டனர்.
இதையடுத்து மணப்பெண் வீட்டில் இருந்த பணம், தனது மாமியார் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் கதவை திறந்து தப்பி ஓடிவிட்டார்.
வீட்டிற்கு வெளியில் காத்து நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி அப்பெண் தப்பிச்சென்றுவிட்டார். காலையில் ரஞ்சித் குடும்பம் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் மணமகளை தேடிப்பார்த்தார். அவரையும் காணவில்லை.
இது குறித்து மணமகன் ரஞ்சித் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மணமகள் தனக்காக வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் காத்து நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறிச்செல்வது பதிவாகி இருந்தது. இதனால் இதில் பெரிய மோசடி கும்பல் இதில் தொடர்பு இருக்கும் என்று சந்தேகப்படும் போலீஸார் அது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.