
இந்தியா மற்றும் உலக அரங்கின் பரபரப்பு செய்தியே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியும் நேற்று, உரையாடி கொண்டது தான்.
‘ஏன் இது அவ்வளவு முக்கியம்’ என்று கேள்வி எழுகிறதா? ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து இந்தியாவிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் பெரிதாக எந்தப் பேச்சுவார்த்தையும் இருந்ததில்லை. மேலும் தாலிபன்களை அரசை இந்தியா அங்கீகரிக்கவும் இல்லை.
இதை எல்லாம் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது உலக அரங்கில் முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்காக அட்டாரி – வாகா கதவு திறக்கப்பட்டது இன்னும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அட்டாரி – வாகா எல்லை மூடல்
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள ஒரே வர்த்தக சாலையான அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டது.
இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான், ‘இனி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் எந்த வணிகமும் நடக்காது… அதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதிக்காது’ என்று அறிவித்தது.
ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பாகிஸ்தான் வழியாக, இந்தியாவிற்கு சாலை மார்க்கமாக சில பொருட்களை வணிகம் செய்து வருகிறது. இந்த வணிகப் பாதை மிகவும் எளிமையானது. மேலும், இந்தப் பாதை மூலம் வணிகம் செய்தால் மிக குறைந்த செலவே ஆகும்.
இதனால்…
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உத்தரவுகளால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்களை ஏற்றி வந்த கிட்டதட்ட 160 லாரிகள் இரு நாடுகளின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
உணவு பொருள்கள் என்பதால் அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு போகும் நிலைமைக்கு செல்லும்.
இதனால், முன்பணம் கொடுத்து வாங்கி இந்தப் பழங்களை எதிர்பார்த்துகொண்டிருந்த இந்திய வணிகர்கள் இந்த டிரக்குகளை இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த லாரி ஓட்டுநர்களும் இந்தியாவிற்குள் அந்தப் பழங்களை கொண்டுவர முயற்சி செய்து வந்தனர்.
நேற்று என்ன நடந்தது?
அதன் விளைவாக, நேற்று முதல் 8 லாரிகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. இனி அடுத்தடுத்தாக மீதம் உள்ள லாரிகள் இந்தியாவிற்குள் வரும். ஆப்கானிஸ்தான் கோரிக்கையினால் இந்த லாரிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.