• May 16, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

ஊட்டியில் பெய்த கனமழை

கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் இந்த குளிர் மழையைக் கொண்டாடி ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஊட்டி நகரில் பொழியத் தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், ஊட்டி படகு இல்லம் செல்லும் முக்கிய சாலையில் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.

வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையிலும் காட்டாற்று வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் மழைநீர் தேங்கியதால்‌ வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த மழையால் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் இருப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

ஊட்டியில் பெய்த கனமழை

தேயிலை மகசூல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொட்டும் மழையிலும் ஊட்டியில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முறையான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *