
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மெதுவாக குறைத்து வருகிறது. அந்தத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தொழிற்சாலைகளை கட்டமைப்பதை நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா உறவில் புகைச்சல் இருப்பதாக பேசப்பட்டது.
இந்த நிலையில், பாஜக எம்பி கங்கனா ரானாவத் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கைக்கு என்னக் காரணமாக இருக்கும்?
ட்ரம்ப் அமெரிக்க அதிபர் மட்டுமே. ஆனால் உலகின் மிகவும் அதிகம் விரும்பப்படும் பிரதமர் மோடி.
ட்ரம்ப் இரண்டாவது முறையாகதான் அதிபராகியிருக்கிறார். ஆனால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர்.
ட்ரம்ப் ஆல்பா மேல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நம் பிரதமர் எல்லா ஆல்பா மேல்-க்கும் மேலான அப்பா.
இது ட்ரம்ப்பின் பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் ட்ரம்பை விமர்சித்து கமெண்ட் செய்து வந்தனர். இதற்கிடையில் பா.ஜ.க எம்.பி கங்கானா ரானாவத்தின் பதிவு எக்ஸ் பக்கத்திலிருந்து டெலிட் செய்யப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்து பதிவிட்டிருந்த எம்.பி கங்கானா ரானாவத், “ஆப்பிள் நிறுவன நிர்வாகியிடம் அமெரிக்க அதிபர் பேசியது குறித்து நான் பதிவிட்டதை நீக்குமாறு பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், என்னுடைய அந்த தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததற்கு வருத்தப்படுகிறேன். அறிவுறுத்தல்களின்படி நான் உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.