
சென்னை: “குடியரசுத் தலைவர் 14 வினாக்களுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது, இதுபோன்ற வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய மத்திய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி, அவர் பொறுப்பேற்றுக் கொண்ட ஆரம்ப நாளில் 2021 செப்.18 மாநில அரசுக்கும், தமிழக மக்கள் உணர்வுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு, மாநில உரிமையை மறுப்பதுடன், மக்கள் நலனுக்கு ஆதரவாக செயல்படுவதை முடக்கி வைக்கிறார்.