• May 15, 2025
  • NewsEditor
  • 0

‘ஒருவேளை ஜெயிக்கலைனா?, ஒருவேளை ஜெயிச்சுட்டா’ எனக் கேள்விகளுடன் நித்தம் போர் நடத்திக் கொண்டு நிராகரிப்பு, அவமானம், கைவிடாத நம்பிக்கை, வாழ்க்கையின் ஆடுபுலி ஆட்டங்களைக் கடந்து இயக்குநராக வேண்டும் எனச் சினிமா கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் அத்துனைபேருக்கும் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை.

வாய்ப்பு கிடைத்து முதல் படத்திலேயே வரவேற்பைப் பெற்றவர்களும் இருக்கின்றனர், பெறாமல் அடுத்தடுத்த படங்களில் விடாமுயற்சியுடன் வென்றவர்களும் இருக்கின்றனர். 

2015 முதல் 2025 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்களின் லிஸ்ட்.

காக்க முட்டை – மணிகண்டன்

காக்க முட்டை – மணிகண்டன்  

பணம் படைத்தவர்களுக்காக மாறிவிட்ட சென்னை மாநகரில் வறுமையின் விளிம்பில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் ‘ஒரு பீட்சா சாப்பிட வேண்டும்’ என ஆசைப்படும் கதை வழியே சமூக – பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் போகிறபோக்கில் கண்ணாடியாகக் காட்டிய திரைப்படம் ‘காக்கமுட்டை’.

முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு தந்து இயக்குநர் மணிகண்டனை வரவேற்றது.

இதையடுத்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவாசாயி’ எனத் தமிழ் சினிமாவில் மதிப்புமிக்க இடைத்தைப் பிடித்துக் கொண்டார். 

உறியடி – விஜய்குமார் 

1999-ல் இரு வேறு சாதிகளுக்கு இடையே சிக்கி, தீண்டாமையை எதிர்க்கிற சுயமரியாதை மிக்க நான்கு மாணவர்களின் ரெளத்திரத்தைத் திரையில் நட்பும், அதிரடியுமாகச் சமூகத்தின் முகத்தில் சாதிக்கெதிரான ஹாக்கி பேட்டை ஓங்கி அடித்தத் திரைப்படம் ‘உறியடி’.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என முதல் படத்திலேயே துணிச்சலுடன் சினிமாவில் கால் பதித்து வெற்றி வாகை சூடியவர் விஜய்குமார்.

‘நீங்க சோஷியலி எலைட், நாங்க சோஷியலிஸ்ட்’ என வசன கர்த்தாகவும் ‘சூரரைப் போற்று’ படத்தில் கவனம் ஈர்த்தார்.

துணிச்சலும், ரெளத்தரமும் கொண்ட இயக்குநர் விஜயகுமாருக்கு வெற்றிகளைக் கொட்டிக் கொடுக்க தமிழ் சினிமா காத்திருக்கிறது.

விஜய்குமார், கார்த்திக் நரேன்
விஜய்குமார், கார்த்திக் நரேன்

துருவங்கள் 16 – கார்த்திக் நரேன் 

ஒவ்வொரு மனுஷனுக்குமே ஏதாவது ஒரு கணம் கண்ணை மறைக்கும். அந்தக் கணம் மூளையையும் மறைக்கும்.

சம்பவங்களின் அடுக்கடுக்கான பிணைப்புகள், விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களைக் கச்சிதமாகக் கையாண்ட விதம் என முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன்.

இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு, படத்தில் நடித்த மொத்தக்  கதாபாத்திரங்கள் 16 பேர். கதையும் 16 மணி நேரத்தில் நடக்கும்.

குறும்பட இயக்குநர்களிலிருந்து, தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு நம்பிக்கை இயக்குநர் கார்த்திக் நரேன்.

‘மேயாத மான்’ – ரத்னகுமார்

முரளியின் `இதயம்’ படத்திற்குப் பிறகு ஒருதலைக் காதலை அழகுடனும், எளிமையுடன் நட்பு, காதல், தங்கை பாசம் என அழுத்தமான மன உணர்வுகளைப் போகிற போக்கில் ஜாலியாக மனம் கவர்ந்த திரைப்படம் ‘மேயாத மான்’.

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ரத்னகுமார், ‘ஆடை’, ‘குலு குலு’ எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தத் திரைப்படங்களைக் கொடுத்தார்.

‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ படத்தில் துணை கதாசிரியராகவும் பங்காற்றி வருகிறார்.  

ரத்னகுமார்,  ஸ்ரீகணேஷ்
ரத்னகுமார், ஸ்ரீகணேஷ்

8 தோட்டாக்கள் – ஸ்ரீகணேஷ்

வங்கிக் கொள்ளை ஒன்றில் தெரியாமலே சிக்கிக் கொள்கிறார் ஒரு காவல் அதிகாரி. அந்தக் குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்களை அவர் தேடி அலைவதே 8 தோட்டாக்கள்.

‘சும்மா சொல்லுவாங்க சார். நல்லதே செய் நல்லதே நடக்கும்னு நேர்மையா இருந்தா ஊரே உன்னைப் புகழும். அதெல்லாம் சுத்த பொய், இதை முதல் முதல்ல சொன்னவன் என் கைல கெடைச்சான், அவன செருப்பாலேயே அடிப்பேன்’ என எம்.எஸ். பாஸ்கர் சொல்லும் வசனம் பார்வையாளர்களைப் படத்திற்குள் இழத்த வசனம்.

காவல்துறை விசாரணைகள், கூடவே பயணிக்கும் குற்றவாளிகளின் கதை, அவர்களின் பின்புலம், அழுத்தமான வசனங்கள் என முதல் படத்திலேயே திரில்லரை கச்சிதமாகக் கையாண்டு கவனம் ஈர்த்தார் ஸ்ரீகணேஷ்.

`குரங்கு பொம்மை’ – நித்திலன்

பணம் என்பது மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளைச் சிதைத்து, எப்படிக் குலைத்துப்போடுகிறது என்பதையும் பணத்தைத் தாண்டியும் உறவுகளை நேசிக்கும் மனித மனங்களையும் குற்றப் பின்னணி திரைக்கதை வழியாகச் சொல்லி கவனம் ஈர்த்தத் திரைப்படம் ‘குரங்கு பொம்மை’.

விறுவிறுப்பான திரைக்கதை, மனித மனதின் ஆழ் உணர்வுகளைத் திரையில் கொண்டு வந்து அறிமுக இயக்குநராக முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் நித்திலன்.

நாளை இயக்குநர் நிகழ்ச்சி வழியாக தமிழ் சினிமாவில் கால்பதித்தவர். அவரது அடுத்த படமான ‘மகாராஜா’வும் நல்ல வரவேற்பைப் பெற தமிழ் சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் இயக்குநர்களில் ஒருவராக கவனம் ஈர்த்திருக்கிறார். 

கோபி நயினார், நித்திலன்
கோபி நயினார், நித்திலன்

அறம் – கோபி நயினார்

ஒருபக்கம், மினரல் வாட்டரை கேன் கேனாக குடித்துக் களிக்கும் மாடர்ன் இந்தியா, மறுபக்கம் ஒரு மடக்குத் தண்ணீருக்காகப் பல மைல்கள் நடக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களின் இந்தியா.

விஞ்ஞானத்தை எளிய மனிதர்களுக்காகப் பயன்படுவதிலும் ஆர்வம் காட்டுங்கள் என ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை எடுக்க முடியாமல் போராடும் கதையின் வழியே அரசியல் பேசி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். 

`அருவி’ –  அருண்பிரபு

சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகரும் கொண்டாடிய திரைப்படம் ‘அருவி’.

நான் லீனியர் திரைக்கதை, நச் வசனங்கள் எனத் தனிநபர் வாழ்க்கையில் மீடியாவின் தலையீடு, சாமியார்கள் மேல் கட்டப்படும் புனிதப் பிம்பம் உள்ளிட்வற்றைக் கதையின் போக்கிலே பேசி, ஒரு பெண் மீதான மதிப்பீடுகளை உடைத்து பெண்ணியம் பேசும் படத்தைச் சமூகத்திற்கான அரசியல் படமாகவும், அதே நேரம் மன நெகிழ வைக்கும் படமாகவும் எடுத்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண்பிரபு. அவரது அடுத்த படமான ‘வாழ்’ படமும் விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தது.

அருண்பிரபு, லோகேஷ் கனகராஜ்
அருண்பிரபு, லோகேஷ் கனகராஜ்

மாநகரம் – லோகேஷ் கனகராஜ்

சென்னை மாநகரத்தின் இரவுகளையும் மர்மங்களையும் பரபர திரில்லராக எடுத்து தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ்.

இதையடுத்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ என பிஸியான இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

பரியேறும் பெருமாள் – மாரிசெல்வராஜ்

சமூகத்தில் புரையோடிக் கிடைக்கும் சாதிய – சமூக முரண்களைத் தன் வாழ்க்கை அனுபவம் மூலம் கைதேர்ந்த திரைமொழியில் பெயர்த்து முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர் மாரிசெல்வராஜ்.

‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ எனத் தமிழ் சினிமாவில் சமத்துவத்தையும், மனிதத்தின் மனசாட்சியையும் பேசும் இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

96 - பிரேம்குமார், மாரிசெல்வராஜ்
96 – பிரேம்குமார், மாரிசெல்வராஜ்

96 – பிரேம்குமார்

‘பரிசுத்தக் காதல்’ என முதல் படத்திலேயே காதல் மொழி பேசி தமிழ் ரசிகர்களின் அடிமனதில் இருக்கும் காதலைத் தொட்டுப் பேசியவர் பிரேம்குமார்.

பெண்களைப் பின் தொடர்ந்து தொல்லைகள் செய்யாமல் அழகானக் காதல் கதை சொல்லி மனம் கவர்ந்தவர்.

‘மெய்யழகன்’ என மற்றுமொரு மனதைத் தொடும் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான இயக்குநராக மாறியிருக்கிறார்.

அவரது அடுத்தடுத்த படைப்புகளை தமிழ் சினிமா ரசிகர்கள் இதயம் திறந்து வரவேற்கக் காத்திருக்கின்றனர்.

கோலமாவு கோகிலா – நெல்சன் திலீப்குமார்

அம்மாவுக்கு வந்த புற்றுநோயால் அலங்கோலமாகிப்போகும் வாழ்க்கையை மீண்டும் ரங்கோலி கோலமாக மாற்றப் போராடும் மகளின் கதையைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி திரைமொழியில் ‘டார்க் ஹூமர்’ எனத் தனக்கெனத் தனி ஜானரை வகுத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே புள்ளி வைத்துக் கோலம் போட்டுவிட்டார் நெல்சன் திலீப்குமார்.

‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’, ‘ஜெயிலர் 2’ என அடுத்தடுத்து பிஸியாகியிருக்கிறார். 

நெல்சன் திலீப்குமார், பி.எஸ் மித்ரன்
நெல்சன் திலீப்குமார், பி.எஸ் மித்ரன்

இரும்புத்திரை – பி.எஸ் மித்ரன்

ஒவ்வொருவரின் பெர்சனல் தகவல்கள், ஸ்மார்ட்போன்கள் மூலம் டேட்டாவாகப் பணமோசடி செய்யும் ஹேக்கர்கள் கையில் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதைத் திரையில் ஆக்‌ஷன் திரில்லராகச் சொல்லி கவனம் ஈர்த்தவர் பி.எஸ் மித்ரன்.

‘ஹீரோ’, ‘சர்தார்’, ‘சர்தார் 2’ என டிஜிட்டல் யுகத்திற்கான உளவுக் கதைகளைச் சொல்லும் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

கனா – அருண்ராஜா காமராஜ்

கிரிக்கெட்டில் சாதிக்கப் போராடும் பெண்ணின் கதை ஸ்போர்ட்ஸ் திரில்லராகவும், ஜாலியாகவும் திரையில் கொண்டு வந்து அறிமுகத்திலேயே அடையாளம் பெற்றவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பாலியல் வழக்கை மையமாக வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் எனப் பன்முகங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறார். 

அருண்ராஜா காமராஜ், கே.ஆர்.பிரபு
அருண்ராஜா காமராஜ், கே.ஆர்.பிரபு

 எல்.கே.ஜி – கே.ஆர்.பிரபு

நடப்பு அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்து, கட்சிகளின் செயற்பாடுகளைத் தீர்மானிப்பவர்களாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மாறியிருப்பதைக் காமெடி கலந்துச் சொல்லி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கே.ஆர்.பிரபு.

இவரது அப்பா கே.ராஜன் நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று பரவலாக அறிப்பட்டவர். இவர் மகன் `எல்.கே.ஜி’ இயக்குநர் கே.ஆர்.பிரபு.

`சினிமாவில் தனியாக ஒரு படத்தை இயக்கி வெற்றிபெற்ற பிறகே குடும்பத்தினரைச் சந்திப்பேன்’ என்று சபதம் எடுத்து 15 ஆண்டு பிரிந்திருந்து இப்படத்தின் வெற்றி மூலம் குடும்பத்துடன் சேர்ந்தவர். 

கோமாளி – பிரதீப் ரங்கநாதன்

பள்ளி இறுதியாண்டில் தனக்குப் பிடித்த பெண்ணிடம் காதலைச் சொல்லச் செல்லும்போது விபத்துக்குள்ளாகி, கோமாவில் விழுகிறார் ஜெயம் ரவி. ஒன்றில்லை, இரண்டில்லை, 16 ஆண்டுகள்!

அதன்பின் கண் விழித்துப் பார்த்தால் உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது என நாஸ்ட்டாலஜிக் கதை மூலம் கவனம் ஈர்த்தவர்.

‘இனமென பிர்ந்தது போதும்’ என ரீல்ஸ் மூலம் ரிபீட் மோடில் பிரபலமானவர். அடுத்த படமான ‘லவ் டுடே’ ஹிட் அடித்து அவரை அடுத்தடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

இயக்குநரகாவும், நடிகராகவும் தமிழ் சினிமாவின் கேரண்டிட் நட்சத்திரமாக மாறியிருக்கிறார். 

அஸ்வந்த் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்
அஸ்வந்த் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்

ஓ மை கடவுளே – அஸ்வந்த் மாரிமுத்து

இந்த ஜெனரேஷனுக்கான காதல், திருமணம், நட்பு என உறவுச் சிக்கல்களைக் கற்பனை கலந்த பேன்டஸியுடன் சேர்த்து திரையில் பேசியவர் இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து.

முதல் படமே ஹிட் அடிக்க, அடுத்த படமான ‘டிராகன்’ மெகா ஹிட் அடித்து சிம்பு படத்தை இயக்குகிறார் அஸ்வந்த். இன்றைய தலைமுறையினருக்கான இயக்குநராக கவனம் ஈர்த்து அடுத்தடுத்த உயரங்களை நோக்கி வேகமெடுத்துக்கிறார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – தேசிங்கு பெரியசாமி

டெக்னிக்கலாக ஆட்டையைப் போடும் இரு இளைஞர்களின் இதயங்களை இரு பெண்கள் கொள்ளையடிக்க, காதலும் – பணக் கொள்ளையுமாக ஜாலியான பொழுது போக்குத் திரைப்படமாக கவனம் ஈர்த்தது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

அறிமுக இயக்கத்திலேயே விறுவிறு திரைக்கதை, ஜாலியான காதல் எனத் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சிம்பு 50 புராஜெக்டில் இணைந்திருக்கிறார்.

தேசிங்கு பெரியசாமி, மடோன் அஷ்வின்
தேசிங்கு பெரியசாமி, மடோன் அஷ்வின்

மண்டேலா – மடோன் அஷ்வின்

இரண்டு கிராம மக்களும் சேர்ந்து தேர்வு செய்யும் ஊர்த் தலைவர் தேர்தலில், ஒற்றை ஓட்டு வெற்றியாளரைத் தீர்மானிக்குமென்றால் என்ன நடக்கும் என்பதைச் சாட்டையடி காமெடியாகச் சொல்லி சாதி, ஒடுக்குமுறை, உள்ளாட்சித் தேர்தல் அரசியல் ஆகியவற்றை துணிச்சலுடன், மனம் நெகிழும் திரைப்படமாக எடுத்து கவனம் ஈர்த்தார்.

சமூகம் சார்ந்து செய்யும் பகடிகளில் கொஞ்சம் பிசகினாலும் அது அபத்தமாக, ஆபத்தானதாகிவிடும். அதைத் தன் முதல் படத்திலேயே தெளிவாகக் கையாண்டு கைதேர்ந்த இயக்குநர் என்று முத்திரை பதித்தவர் மடோன் அஷ்வின். 

‘மண்டேலா’ ஓடிடியில் வந்து வரவேற்பைப் பெற அவரது ‘மாவீரன்’ திரையில் விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புப் பிரச்னையைப் பேசி கவனம் ஈர்த்து வரவேற்பைப் பெற்றது.

ராக்கி – அருண் மாதேஸ்வரன்

பழிக்குப் பழி கதையை ரத்தம் சிதறச் சிதற, உடலுறுப்புகள் நொறுங்கும் சத்தம் கேட்கக் கேட்கச் சொல்லி ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் கவனம் ஈர்த்தவர்.

கருப்பு – வெள்ளை என முதல் படத்திலேயே துணிச்சலுடன் இறங்கியது, அவரது சினிமா காதலைக் காட்டியது.

‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் தனுஷை வைத்து இளையராஜாவின் பயோ-பிக் எனத் தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அருண் மாதேஸ்வரன், கணேஷ்.கே. பாபு
அருண் மாதேஸ்வரன், கணேஷ்.கே. பாபு

டாடா – கணேஷ்.கே. பாபு

காதல் திருமணம் செய்து, உறவுச் சிக்கல்களால் சிக்கித் தவிக்கும் காதலர்களின் பிரிவையும், சிங்கிள் ஃபாதராக குழந்தையை வளர்க்கும் தந்தை – மகனுக்கான உறவையும் அழகாக திரைப்படமாக்கி முதல் படத்திலேயே மனங்களை வென்றவர் அறிமுக இயக்குநர் கணேஷ்.கே. பாபு.

யாத்திசை – தரணி ராசேந்திரன்

மன்னர் காலக் கதையைச் சரியான அரசியலோடும், புதுமையோடும் சொல்லி, ஆணாத்திக்கம், ஆண்களின் திமிர், மன்னர் ஆட்சியின் போர் வெறி, பேரரசுகளின் ஆதிக்கம் போன்றவற்றை மன்னர் கால போர் வரலாற்றைக் குறைந்த பட்ஜெட்டில் திரையில் பிரமாண்டம் காட்டி கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன்.

ராம்குமார் பாலக்கிருஷ்ணன், தரணி ராசேந்திரன்

பார்க்கிங் – ராம்குமார் பாலகிருஷ்ணன்

இரு கார்கள்; இரண்டு ஆண்கள்; ஒரு பார்க்கிங் எனப் பார்க்கிங்கில் யார் வண்டியை நிறுத்துவது என்கிற சிறிய ஈகோ `தீ’, இரு நபர்களிடையேயான பெரு நெருப்பாகிப் பின்னர் எப்படிக் காட்டுத்தீயாக மாறுகிறது என்கிற சாதராண கதை திரை மொழியில் சுவாராஸ்யமாக்கி ரசிக்க வைத்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

அயோத்தி – மந்திரமூர்த்தி

மொழி புரியாத ஊரில் திக்கற்று நிற்கும் குடும்பத்துக்கு ஆதரவாக மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தி சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாகச் சொல்லி, பரபரப்பான திரைக்கதை, சிறப்பான நடிப்பு என இதயம் நெகிழும் திரைப்படமாக எடுத்து முதல் படத்திலேயே தமிழ் சினிமா இதயத்தை வென்று மந்திரம் செய்தவர் மந்திரமூர்த்தி.

மந்திரமூர்த்தி, விக்னேஷ் ராஜா
மந்திரமூர்த்தி, விக்னேஷ் ராஜா

போர் தொழில் – விக்னேஷ் ராஜா

பெண்களைத் தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் ஒருவனைத் தேடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்கள் திரில்லர் கதையாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது ‘போர் தொழில்.

சீரியல் கில்லர்களை நியாயப்படுத்தாமல் குற்றத்திற்கு ஒருவகையில் காரணமாக இருக்கும் சமூகப் பிரச்னைகள் குறித்து ஒரு பக்குவமான ஆரோக்கியமான உரையாடலை முன்வைத்து, விறுவிறு திரைக்கதையுடன் கவனம் ஈர்த்தார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

Good Night – விநாயக் சந்திரசேல்கரன்

`குறட்டைதானே!’ என நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயம் ஓர் இளைஞரின் வாழ்க்கையில் எந்த அளவு பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதை காமெடி டிராமாவாகச் சொல்லி கவனம் ஈர்த்தவர் விநாயக் சந்திரசேல்கரன்.

முதல் திரைப்படத்தையே இதயம் நெகிழும் திரைப்படமாக எடுத்து தமிழ் சினிமா இதயத்தை வென்றார்.

விநாயக் சந்திரசேல்கரன், பி.எஸ் வினோத்ராஜ்
விநாயக் சந்திரசேல்கரன், பி.எஸ் வினோத்ராஜ்

கூழாங்கல் – பி.எஸ் வினோத்ராஜ்

ஆணாதிக்கம், குடும்ப வன்முறை, மது அடிமைத்தனத்தைக் கேள்வி கேட்கும் திரைப்படமாக வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது.

கதையைப் பிரதானமாக எடுத்துக் கொண்டு, அதை இரு கதாபாத்திரங்களின் மூலம் கட்டி எழுப்பி அதன் பின்னணியிலே நம்மை அலைய வைத்த தமிழ் சினிமாவின் புதியதொரு முயற்சி எனத் தமிழ் சினிமா பி.எஸ் வினோத்ராஜைக் கட்டித் தழுவிக் கொண்டது. இவரது ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் கிராமங்களில் இருக்கும் சாதி, பெண் அடிமைத்தனத்தைப் பேசி கவனம் ஈர்த்தது.

சொர்க்கவாசல் – சித்தார்த் விஸ்வநாத்தின்

செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்குச் செல்லும் சாதுவான இளைஞரின் கதையாக குடும்ப பாசம், ஆற்றாமை, வெறுமை, பதற்றம், அரசியல் என முதல் படத்திலேயே பல விஷயங்களைத் திரையில் கொண்டு வந்து கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்தின்.

பாரி இளவழகன், சித்தார்த் விஸ்வநாத்தின்

ஜமா – பாரி இளவழகன்

கூத்துக் கலை, காதல், குடும்பம், பாலினம் எனப் பல கலை நுணுக்கக்களை, சமூக அரசியலோடு பேசி கவனம் ஈர்த்தவர் பாரி இளவழகன்.

கூத்து நிகழ்த்தப்படும் இடம், அது சம்பந்தமான பொருள்கள் என வட தமிழ்நாட்டுக் கூத்து உலகை உயிர்ப்போடு கண்முன் கொண்டு வந்து இயக்குநராகவும், நடிகராகவும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்று, தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

Blue Star – எஸ்.ஜெயக்குமார்

கிராமத்தில் இருக்கும் இரு அணிகள், அவர்களுக்குள் நடக்கும் சண்டை, அதன் பின்கதை, சாதிய வேறுபாடு என கிரிக்கெட் விளையாட்டின் வழியே சமூக அரசியலை, சமத்துவத்தைப் பேசி நல்ல வரவேற்பைப் பெற்றது ‘Blue Star’.

அறிமுக இயக்குநராகக் களமிறங்கி முதல் மேட்சிலேயே வெற்றிபெற்றிருக்கிறார் எஸ்.ஜெயக்குமார்.

எஸ்.ஜெயக்குமார், தமிழரசன் பச்சமுத்து
எஸ்.ஜெயக்குமார், தமிழரசன் பச்சமுத்து

லப்பர் பந்து – தமிழரசன் பச்சமுத்து

கிரிக்கெட்டில் இரு ஆண்களுக்குள் நடக்கும் அகங்கார சண்டை, நெகிழ வைக்கும் காதல், கிரிக்கெட் மூலம் சாதிய முரண்கள், சமத்துவம் பேசி நேர்த்தியான பொழுது போக்குத் திரைப்படமாக எடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து.

Black – கே.ஜி.பாலசுப்ரமணி

பேரலல் ரியாலிட்டி, குவாண்டம் பிசிக்ஸ், வொர்ம் ஹோல் எனப் பல்வேறு தியரிகளைப் பேசி ஹாரர் திரில்லர் திரைப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது ‘Black’.

புத்திசாலித்தனமான திரைக்கதை, தேர்ந்த தொழில்நுட்பத்துடன் இரண்டு மனிதர்கள், ஜன்னல், ஓவியம், வீடு, மெழுகுவர்த்தி என்று குறுகிய வெளியில் சுவாரஸ்யமாகக் கதையாக இப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்திருக்கிறார்  இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.

அபிஷன் ஜீவிந்த், கே.ஜி.பாலசுப்ரமணி

டூரிஸ்ட் ஃபேமிலி – அபிஷன் ஜீவிந்த்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து சென்னையில் குடியேறுகிறது ஈழத் தமிழர்கள் குடும்பம்.

அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறது என்று அன்பின் மீது எழுதப்பட்டு மனங்களைக் கவர்ந்த படம்.

மனிதத்துடன் நீட்டப்படும் ஆதரவுக் கரம், அதைப் பற்றிக்கொள்ளும் மற்றொரு கரம் என எழுத்திலும், சீரியஸான விஷயத்தைப் பொறுப்புடன் கையாண்டு அதை நகைச்சுவையாகச் சொன்ன விதத்திலும் அறிமுக படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.

கடந்த 10 ஆண்டுகளில் பல அறிமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் புது வெளிச்சம் பாய்ச்சி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து அறிமுகமாகியிருக்கின்றனர். இதுதவிர வேறு சில இயக்குநர்கள் உங்கள் மனதைக் கவர்ந்திருந்தார் கமெண்டில் சொல்லுங்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *