
மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை அகற்றிவிட்டு அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி நிறுவனத்திடம் வழங்கி இருக்கிறது. இதையடுத்து தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது.
தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தில் இலவச வீடுகள் பெற தகுதியில்லாதவர்களுக்கு தாராவிக்கு வெளியில் மாற்று வீடு வழங்க அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசு அதானி நிறுவனத்திற்கு மும்பை புறநகர் பகுதியில் உள்ள பாண்டூப், முலுண்ட், வடாலா, தேவ்னார் போன்ற பகுதியில் நிலங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில் உப்பள நிலமும் அடங்கும். அந்த நிலத்தில் தாராவி மக்களுக்கு வீடு கட்டப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்காக தேவ்னார் பகுதியில் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலத்தில் குப்பை கிடங்கு இருக்கிறது. இந்த குப்பை கிடங்கு மூடப்பட்டுவிட்டது.
கடும் எதிர்ப்பு… ஆனாலும்..!
ஆனாலும் அங்கிருந்து மீத்தேன் வாயு வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்த குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடு கட்ட அதானி நிறுவனத்திற்கு மாநில அரசு 124 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருக்கிறது. இதற்கு தாராவி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் வீடு கட்ட வேறு நிலம் இல்லை என்று கூறி குப்பை கிடங்கு நிலம் ஒதுக்கும் முடிவில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது.
இதையடுத்து தேவ்னார் குப்பை கிடங்கில் இருக்கும் குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. ரூ.2368 கோடி செலவில் 185 லட்சம் டன் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்குப்பை கிடங்கு மொத்தம் 311 ஏக்கர் கொண்டது ஆகும்.
3 ஆண்டுகள் ஆகும்..!
மும்பையின் மிகப்பழமையான குப்பை கிடங்காக கருதப்படுகிறது. இதில் 271 ஏக்கர் பரப்பில் இருக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதோடு இங்கு குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலை வரும் அக்டோபர் மாதம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. தேவ்னார் குப்பை கிடங்கில் இருந்து குப்பைகளை அகற்ற 3 ஆண்டுகள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 1200 லாரிகள் மூலம் 2300 டன் குப்பை வீதம் அகற்றப்பட இருக்கிறது. சில இடங்களில் குப்பை 40 அடி உயரத்திற்கு குவிந்து இருக்கிறது.
அங்கிருந்து எடுக்கப்படும் குப்பை கழிமுகப்பகுதியில் போடப்பட இருக்கிறது. இதற்கு பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் வாங்கவேண்டியிருக்கிறது. ஆனால் 2368 கோடி செலவு செய்து குப்பைகளை அகற்றவேண்டிய அவசியம் என்ன என்று வர்ஷா கெய்க்வாட் எம்பி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,”தேவ்னார் குப்பை கிடங்கில் இருந்து 20 ஆண்டுகளுக்கு மீத்தேன் வாயு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனைப்பற்றி கவலைப்படாமல் மாநில அரசு தாராவி மக்களை குப்பை கிடங்கு இருக்கும் இடத்திற்கு மாற்ற இருக்கிறது”என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே,”மும்பையில் கழிவு மேலாண்மை என்ற பெயரில் குப்பைகளை அகற்ற தனி வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதானிக்காக மும்பை மக்களிடம் வரி வசூலிக்கிறார்கள். மும்பையிடமிருந்து நிலத்தை பிடுங்கி அதானியிடம் மாநில அரசு கொடுக்கிறது. இதற்கு யார் பணம் கொடுப்பார்கள்”என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.