
”ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். சிலருக்குப் புளிப்பு, சிலருக்கு இனிப்பு, சிலருக்குக் காரம் என நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு உணவை நம்மையும் அறியாமல் விரும்பிச் சாப்பிடுவோம். உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது அதுபற்றிய முன்னெச்சரிக்கையை உடல் நமக்கு அறிவிக்கிறது. சுவை மூலமாக, உடல் தனது பிரச்னையை வெளிப்படுத்துகிறது. அதாவது ஒருவர் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்தே அவருக்கு உள்ள பாதிப்பையும் அறிய முடியும்” என்கிற சித்த மருத்துவர் பத்மபிரியா, அதுபற்றி விரிவாகப் பேசுகிறார்.
”கர்ப்பிணிகள் புளிப்புச் சுவையை அதிகம் நாடுவதைக் கவனித்திருப்போம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் காரணமாக, அடிக்கடி வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, சத்துக்கள் வெளியேறிவிடும். குறிப்பாக, கல்லீரலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காது. இதனால்தான் அவர்களது நாக்கு புளிப்புச் சுவையைத் தேடுகிறது.
உடலில் சோடியம் குறைபாடு உள்ளவர்கள் இயல்பாகவே உப்புச் சுவையை அதிகம் விரும்புவார்கள். குளுக்கோஸ் குறைவாகக் காணப்படும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன்மூலமாக, பற்றாக்குறையான சத்துக்களை உடல் தானாகக் கேட்டுப் பெறுகிறது. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை தெரிவிக்க, மூளை வயிற்றுக்குக் கட்டளை இடுகிறது. இதனைச் செயல்படுத்தி, தேவையான சத்துக்களைப் பெறவே இந்த சுவைக்கான தேடல் தொடங்குகிறது.

சாக்லேட் அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்களின் உடலில் மக்னீசியம் அல்லது வைட்டமின் பி பற்றாக்குறை இருக்க வாய்ப்பு உள்ளது. உடல் சோர்வுக்கு முக்கியக் காரணம் வைட்டமின் பி குறைபாடு. சாக்லேட் சாப்பிடும்போது, அதில் உள்ள சர்க்கரை மற்றும் காஃபைன் மூளையில் உள்ள டோபோமைன் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் விளைவாக மூளை தற்காலிகமாகச் சுறுசுறுப்பு அடைகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய முந்திரி, பாதாம், பிஸ்தா, சோயாபீன்ஸ், மீன் ஆகியவற்றை சாப்பிடலாம்.
பிரெஞ்சு ஃபிரை, உருளைக்கிழங்கு வறுவல், பஜ்ஜி, போண்டா போன்ற காரமான நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் குறைவாக இருக்கக்கூடும். பன்மை நிறைவுறா கொழுப்பு அமிலமான ஒமேகா3-ல், நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. இது, இதய நோய்களைத் தடுக்கக்கூடியது. ஒமேகா-3 கொழுப்பு சத்துக்களை பெற மீன், அவகேடோ, நட்ஸ், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சாப்பிடலாம்.

உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு அதிக வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிகமாக உப்புச்சத்து தேவைப்படும். உப்புச்சத்து சிறுநீரகத்தின் மேற்புறத்தில் இருக்கும் அட்ரினல் சுரப்பியின் செயல்திறனுக்கு உதவுகிறது. கடல் உணவுகள், ப்ரெஷ் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
சிலர் அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பர். ஐஸ் வாட்டர் குடித்தவுடன், மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதை நம்மால் உணர முடியும். ஆனால், இது தற்காலிகமான புத்துணர்ச்சிதான். இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் மந்தத்தன்மை, ஐஸ் வாட்டர் குடிப்பதன் மூலம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பதால், பற்களின் வேர் மற்றும் தாடை நரம்புகள் பாதிக்கப்படலாம். இதற்குப் பதிலாக பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இரும்புச்சத்து கிடைக்கும்.

நமக்கு ஒரு குறிப்பிட்ட சுவையில் நாட்டம் ஏற்படுத்தி, உடலில் உள்ள குறிப்பிட்ட சத்துக் குறைபாட்டை மறைமுகமாக உணர்த்துகிறது நம் உடல். அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, குறிப்பிட்ட சுவை கொண்ட உணவுகளில் எது ஆரோக்கியமானதோ அதை எடுத்துக்கொண்டால், நம் உடல் நலம் பெறும்” என்கிறார் சித்த மருத்துவர் பத்மபிரியா.