
உலகில் புகழ்பெற்ற கேன்ஸ் (Cannes 2025) திரைப்படத் திருவிழா பிரான்ஸில் நேற்று தொடங்கி மே 24 (சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.
கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் உலகளாவிய சினிமா பிரபலங்கள் அணிவகுப்பும் தலைப்பு செய்திகளில் இடம்பெறும். ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் டாம் குரூஸ் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த ஆண்டு ரெட் கார்பெட்டில் பங்கேற்கவுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸில் தேர்வாகும் திரைப்படங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கேன்ஸில் திரையிடப்படுவது ஒரு திரைப்படம் மிகப் பெரிய விருதை வெல்வதற்கு ஈடானது. இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்…
ஆஸ்கரில் ஜொலிக்கப்போகும்
கேன்ஸ் விழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள் அடுத்த ஆஸ்கரில் கவனம் பெறுவது வழக்கமாகியிருக்கிறது.
சென்ற ஆஸ்கரில் அனோரா திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெறுவதற்கு முன்பு, கேன்ஸில் Palme d’Or விருதைப் பெற்றது. கடந்த நான்கு கேன்ஸ் விழாக்களில் Palme d’Or விருது பெற்ற திரைப்படங்கள் ஆஸ்கரில் நாமினேட் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான கேன்ஸ் நடுவர் குழுவை பிரெஞ்சு திரை நட்சத்திரம் ஜூலியட் பினோச் தலைமை தாங்குகிறார், அவருடன் சக நடிகர்கள் ஹாலே பெர்ரி மற்றும் ஜெர்மி ஸ்ட்ராங் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான Palme d’Or போட்டியில் உள்ள திரைப்படங்கள்:
Die My Love (ஸ்காட்டிஷ் இயக்குநரால் அரியானா ஹார்விச்சின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.)
The History of Sound
The Mastermind
The Phoenician Scheme
Eddington
Nouvelle Vague
இயக்குநர் அவதாரம் எடுத்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்
ப்ளாக் விடோ நட்சத்திரம் ஸ்கார்லட் ஜோஹன்சன், 94 வயது பெண்மணியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு Eleanor the Great என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அமெரிக்க நடிகை கிறிஸ்டின் ஸ்டீவர்ட் The Chronology of Water என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். வாட்டர் என்ற எழுத்தாளர் லிடியா யுக்னாவிட்சின் நினைவுக்குறிப்பின் அடிப்படையில் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பிரிட்டிஷ் நட்சத்திரம் ஹாரிஸ் டிக்கின்சன் இயக்கியுள்ள Urchin திரைப்படமும் கேன்ஸில் வரவிருக்கிறது.

பெரும் கலைஞர்களின் படைப்பு!
ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவாவின் ஹை அண்ட் லோ திரைப்படத்தைத் தழுவி புகழ்பெற்ற இயக்குநர் ஸ்பைக் லீ இயக்கியுள்ள Highest 2 Lowest திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
மேலும் பல புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்களின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
காசா ஆவணப்படங்கள்
இந்த ஆண்டு திரையிடப்படும் ஆவணப்படங்களுள் முக்கியமானது Put Your Soul On Your Hand And Walk. இது பாலஸ்தீனப் போர் புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசூனாவின் கதையைப் பற்றியது. காசாவில் உள்ள இவரது வீட்டில் இஸ்ரேஸ் குண்டு வீசியதால் இவரது மொத்த குடும்பமும் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் டார்சன் மற்றும் அரபு நாசர் இயக்கிய Once Upon a Time In Gaza மற்றொரு முக்கிய ஆவணப்படமாகும்.
சாண்டான்ஸ் திரைப்பட விழாவில் இருந்த நீக்கப்பட்ட WikiLeaks நிறுவனத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ் பற்றிய ஆவணப்படம் The Six-Billion-Dollar Man படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
U2 ராக் இசைக்குழுவின் பாடகர் போனோ பற்றிய ஆவணப்படமும், நாவலாசிரியர் ஜார்ஜ் ஆலிவர் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளது.