• May 14, 2025
  • NewsEditor
  • 0

ராஜபாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை அதே காப்பகத்தை சேர்ந்த இளைஞர் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆசிரியர் குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது. கணவர் கைவிட்டு சென்ற நிலையில், இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்த வெண்ணிலா எனும் பெண், தன்னுடைய பிள்ளைகளை வளர்க்க முடியாத காரணத்தால் இந்த காப்பகத்தில் விட்டுவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன்படி, வெண்ணிலாவின் இளைய மகன் சாய் சஞ்சீவி (வயது 6). தற்போது, ஒன்றாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் கோடை விடுமுறையில் காப்பகத்தில் தங்கியிருந்தான். இந்தநிலையில், நள்ளிரவில் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென மாயமாகியுள்ளான். இதனை அதிகாலை வேளையில் கவனித்த காப்பக பணியாளர்கள் சாய் சஞ்சீவ்வை நாலாபுறமும் தேடி பார்த்துள்ளனர். தொடர்ந்து காப்பகத்துக்கு அருகே உள்ள விவசாய தோட்டத்தில் தேடிப்பார்த்தபோது, தோட்டத்துக்குள் உள்ள கிணற்றுக்கு அருகிலிருந்து காப்பகத்தில் பணி செய்யும் நவீன்(22)எனும் இளைஞர் வருவதை கவனித்துள்ளனர். இதையடுத்து அவரை வழி மறித்து சிறுவன் குறித்து கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் விவசாய கிணற்றை‌ காப்பக பணியாளர்கள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது, சிறுவன் சாய் சஞ்சீவ் தண்ணீரில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுகுறித்து ராஜபாளையம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், சந்தேகத்தின்‌ அடிப்படையில் நவீனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீஸின்‌ விசாரணையில், நள்ளிரவில் காப்பகத்தின் பின்பக்கக்கதவு வழியாக உள்ளே புகுந்த நவீன், தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் சாய் சஞ்சீவ்வை தூக்கிச்சென்று அருகே உள்ள தோட்டத்தின் விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், நவீன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நவீனிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *