
‘கருடனு’க்குப் பிறகு, சூரி நாயகனாக நடித்திருக்கும் ‘மாமன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரே ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. ‘விலங்கு’ வெப் தொடரை அடுத்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருக்கும் படம் இது. வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் பேசினோம்.
“நான் இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதும் அடுத்தப் படத்துக்கான முயற்சியில இருந்தேன். அப்ப தயாரிப்பாளர் லார்க் ஸ்டூடியோஸ் குமார் அண்ணன், சூரி அண்ணனை வச்சு படம் பண்ணலாம்னு கூப்பிட்டார். போனேன். அப்ப நான் வச்சிருந்த சில லைன்களை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆனாலும் சூரி அண்ணனே, ஒரு கதை வச்சிருக்கிறதா, தயாரிப்பாளர் சொன்னார். அவருக்கு ஒரு ஃபேமிலி டிராமா கதை பண்ணணும்னு ஆசை இருந்தது. நானும் ‘விலங்கு’ போல இல்லாம, வேற ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன். சூரி அண்ணன் சொன்ன கதை பிடிச்சிருந்தது. அதுக்கு திரைக்கதை ரெடி பண்ணி ஆரம்பிச்சோம். அப்படி உருவானதுதான் இந்த ‘மாமன்’” என்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.