
‘டிஜிட்டல் மாற்றம்’ மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய டிஜிட்டல் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இன்று ‘வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்துவதற்கான’ ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதி 09.05.2025, அன்று சித்தார்த்த மொஹந்தி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர், நிர்வாக இயக்குநர்கள், எஸ்.எம்.ஜெகநாத், தப்ளேஷ் பாண்டே, சத் பால் பானு மற்றும் ஆர்.துரைஸ்வாமி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில், தொடங்கப்பட்டது. இந்த வசதி எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பிரீமியம் செலுத்த மற்றொரு மாற்று விருப்பத்தை வழங்குகிறது.
எல்.ஐ.சி போர்டலில் பதிவுசெய்த வாடிக்கையாளர்கள் 8976862090 என்ற வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளைக் கண்டறியலாம் மற்றும் வாட்ஸ்அப் பாட்டில் உள்ள யுபிஐ/நெட் பேங்கிங்/கார்டுகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம்.
பிரீமியம் செலுத்தவேண்டிய பாலிசிகளின் விபரங்கள், பணம் செலுத்துதல் மற்றும் ரசீது பெறும் வரை வாட்ஸ்அப் பாட்டில் மேற்கொள்ளலாம்.
இது குறித்து, எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்த மொஹந்தி பேசுகையில், “இந்த வசதி, எல்ஐசி வாடிக்கையாளர்கள் எளிதாகச் செயல்பட உதவும். வேகமாக வளர்ந்து வரும் வாட்ஸ்அப் செயலி மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் எல்ஐசி பிரீமியங்களைச் செலுத்த முடியும். எல்ஐசி-யின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை உறுதிசெய்து செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த இந்த வசதி உதவும்” என்று கூறினார்.