• May 13, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல பேக்கரி கடையான `கராச்சி பேக்கரி’ கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. பாகிஸ்தானின் பெயர் இருந்ததாலேயே இந்த கடை தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

கராச்சி பேக்கரிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறதா? அதன் வரலாறு என்ன? ஏன் கராச்சி என்ற பெயர் வந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு கராச்சி பேக்கரி

1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கராச்சி பேக்கரியின் உரிமையாளரான கான்சாந்த் ராம்னானி தனது குடும்பத்துடன் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறிய பேக்கரி ஒன்றை நடத்தி வந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு குடும்பத்துடன் சிந்து மாகாணத்தில் இருந்து இந்தியாவின் ஹைதராபாத்திற்கு கான்சாந்த் ராம்னானி குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

ஹைதராபாத்திற்கு வந்த ராம்னானி இங்கும் அதே பேக்கரி தொழிலை ஆரம்பித்தார். பாகிஸ்தானில் இருந்த தனது பேக்கரியின் பெயரான கராச்சியினை நினைவு கூறும் விதமாக `கராச்சி பேக்கரி’ என பெயரிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் கட்டுரையில் கூறுகிறது.

ஆரம்பத்தில் கராச்சி பேக்கரியில், வெளியே வாங்கி உணவுப் பொருள்களை விற்பனை செய்துள்ளனர்.

1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் கைப்பட செய்யும் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். கராச்சி பேக்கரியில் இருக்கும் உஸ்மானியா பிஸ்கட்டுகள் இன்று வரை ஹைதராபாத்தில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

மக்கள் மனதில் நல்ல செல்வாக்கை பெற்ற கராச்சி பேக்கரி 2007 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் ஆடம்பரமான நகரான பஞ்சாரா ஹில்ஸில் தனது இரண்டாவது கிளையை திறந்தது. முதல் கிளை ஹைதராபாத்தில் மோசாம் ஜாஹி சந்தையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

karachi bakery hyderabad

கராச்சி பெயருக்கு கடும் எதிர்ப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு `கராச்சி பேக்கரி’ என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கடும் விமர்சனம் எழுந்தது.

கராச்சி பேக்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது நூறு சதவீதம் இந்திய பிராண்ட், 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் நிறுவப்பட்டது. இது இந்தியாவுக்காக இந்திய மக்களுக்காக அன்புடன் சேவை செய்யும் ஒரு இந்திய பிராண்ட்” என்று தெரிவித்தது.

“சுமார் மூன்று தலைமுறைகளாக நடத்தப்பட்டு வரும் `கராச்சி பேக்கரி’ ஹைதராபாத்தின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது” என்று பேக்கரி சார்பில் கூறுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்ட நிலையில் கராச்சி பேக்கரி தாக்கப்பட்டது.

இது குறித்து தற்போதைய கராச்சி பேக்கரியின் உரிமையாளர் பிரபல செய்தி நிறுவனமான PTI -க்கு அளித்தபேட்டியில்,

”இந்த பேக்கரி இந்தியாவுக்கு குடி பெயர்ந்த எங்கள் தாத்தா கான்சாந்த் ராம்னாணி என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த பேக்கரி தொடங்கி 73 ஆண்டுகள் ஆகிறது.

இங்கு உள்ள மக்களின் முக்கிய அடையாளமாக கராச்சி பேக்கரி இருக்கிறது. ஆகவே பெயரை மாற்றத்தை தடுக்க முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

கராச்சி பேக்கரி உள்ள மற்ற பகுதிகளில் பாஜக தொண்டர்கள் மூவர்ண கொடியினை ஏற்றி உள்ளனர். ஆனால் கராச்சி பேக்கரி தரப்பில் ”நாங்கள் ஒரு இந்தியன் பிராண்ட் பாகிஸ்தான் பிராண்ட் அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *