• May 13, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார்.

ஏற்கெனவே, 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கோலி, அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.

Virat Kohli

கிரிக்கெட்டின் மிக நீண்ட ஃபார்மட்டான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையில் இதுவரை யாரும் செய்திராத, குறிப்பாக வேகப்பந்துவீச்சு யூனிட்டில் புது வேகத்தைப் பாய்ச்சிய கோலிக்கு, சச்சின் போன்ற ஜாம்பவான்கள் முதல் வில்லியம்சன் போன்ற சமகால சிறந்த பேட்ஸ்மேன்கள் வரை பலரும், அவரின் அடுத்தகட்ட பயணத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், வெற்றியோ தோல்வியோ எந்த நொடியிலும் விட்டுக்கொடுக்காமல் போராடும் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கனவை வெறும் 770 ரன்களில் பாதியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்.

சாதனைகளை ஒருபோதும் பார்ப்பதில்லை:

2013-ல் `சீதி பாத் (Seedhi Baat)’ என்ற ஒரு நேர்காணலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது லட்சியம் குறித்து பேசிய கோலி, “சாதனைகளை ஒருபோதும் நான் பார்ப்பதில்லை.

ஒரு போட்டியில் நான் சதமடித்த பிறகுதான், அதிவேகமாக 10 சதங்களை எட்டியது என்பதைத் தெரிந்துகொள்கிறேன். எனவே போட்டிக்குப் பிறகுதான் அதைப் பற்றி எனக்குத் தெரியும்.

எனக்கு இன்னும் ஐந்து இன்னிங்ஸ் இருக்கிறது, இன்னும் 3 சதங்கள் அடித்தால் ஒரு சாதனை படைப்பேன் என போட்டிக்கு முன்பு எதையும் நினைக்க மாட்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுப்பதே எனது குறிக்கோள், அதைத்தான் நான் உண்மையில் அடைய விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

விராட் கோலி

இந்த நிலையில், 123 போட்டிகளில் 210 இன்னிங்ஸ்களில் 30 சதங்கள், 31 அரைசதங்கள் என 46 ஆவரேஜுடன் 9,230 ரன்கள் குவித்திருக்கும் கோலி, 770 ரன்களில் 10,000 ரன்கள் என்ற இலக்கை பாதியிலேயே விட்டுவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சச்சின் (15,921), டிராவிட் (13,288), கவாஸ்கர் (10,122) ஆகியோரே 10,000 ரன்கள் என்ற மைல் கல்லைக் கடந்தவர்களாகவும் இருக்கின்றனர். நான்காவது இடத்தில் 9,230 ரன்களுடன் கோலி இருக்கிறார்.

இருப்பினும், ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 51 சதங்களுடன் கோலியே முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *