
புதுடெல்லி: ‘‘இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, 10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணித்து வருகின்றன’’ என்று இந்திய விண்வெளி ஆய்வுத் துறை தலைவர் வி.நாராயணன் உறுதியாக கூறினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆய்வுத் துறை (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இந்திய நிலப்பரப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இஸ்ரோவின் 10 சேட்டிலைட்கள் பாகிஸ்தானை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன.