
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
அதற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் 50 ஆண்டுக் கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர் சுதிர் ஸ்ரீனிவாஸனின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் ‘கூலி’ திரைப்படம் தொடர்பாகவும் ‘மாஸ்டர் 2’ திரைப்படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்தப் பேட்டியில், “இந்த வருடம்தான் நான் அழுத்தமில்லாமல் வேலைகளைக் கவனித்து வருகிறேன்.
இந்தப் படத்தைத் தொடங்கும்போதே நான் தயாரிப்பாளர்களிடம் ரிலீஸ் தேதியைப் பின்னர் சொல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்.
அதுபோலவே படத்தை முடித்த பிறகு டப்பிங் முடித்து, அவுட்புட் பார்த்த பிறகுதான் ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறினேன்.
அதற்கு அவர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

என்னைச் சுற்றி நடக்கும் அப்டேட்கள் அனைத்தையும் என்னுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் என்னிடம் தெரியப்படுத்துவார்கள்.
அப்படி இந்தப் படங்களிலெல்லாம் இத்தகைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அவர்கள் கூறுவார்கள்.
அதுபோல பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது பார்வையாளர்களுக்கு அயர்ச்சியான உணர்வைக் கொடுக்கிறதா என விவாதிக்க வேண்டிய சூழல் வருகிறது.
‘கூலி’ படத்தை எழுதும்போது என்ன பாடலைப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்து அதற்கான உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறோம்.
ஆனால், அதை நான் பயன்படுத்துவேனா இல்லையா என்பது தெரியாது” என்றவர், “ரஜினி சாரையும் கமல் சாரையும் வைத்து நான் ஒரு திரைப்படம் இயக்குவதாக இருந்தது.
இரண்டு கேங்ஸ்டர்களைப் பற்றிய கதை அது. கொரோனா சூழலால்தான் நடக்காமல் போனது.
இப்போது ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ திரைப்படங்கள் வெளியாகி அவர்களுடைய மார்கெட் உயர்ந்திருக்கிறது.

இப்போது அது நடப்பது கஷ்டம்தான். எல்லோரும் ‘லியோ 2’ படத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எனக்கு ‘மாஸ்டர் 2’ இயக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. முதல் பாகத்தில் கதை முழுவதுமாக முடியவில்லை என நான் உணர்கிறேன்.
‘மாஸ்டர் 2’ படத்தை இயக்குவதற்குச் சரியான ஐடியாவும் என்னிடம் இருக்கிறது. அதை விஜய் அண்ணாவிடமும் சொல்லியிருக்கிறேன்” எனக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…