
Operation Sindoor: இந்தியா கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராகிம்
மும்பையில் 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகள் மற்றும் குடும்பத்தோடு பாகிஸ்தானில் மறைந்து வாழ்கிறான்.
தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டிலேயே இல்லை என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளி சோட்டாசகீல், மனைவி, சகோதரன், மகனுடன் கராச்சியில் மிகவும் வசதியாக, ஐ.எஸ்.ஐ பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறான்.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் அதிர்ச்சியடைந்தான்.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பாதுகாப்பு
இந்தியா நீண்ட நாள்களாக தாவூத் இப்ராகிம் மீது குறிவைத்துள்ளது. இதையடுத்து தங்களது பகுதியில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகள் சோட்டாசகீல் மற்றும் முன்னா ஜிங்கா ஆகியோருடன் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதில் முன்னா என்பவன் பாங்காக்கில் சோட்டாராஜன் மீது தாக்குதல் நடத்தியவன் ஆவான்.

தாவூத் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டிருக்கிறான். அவனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
தாவூத் இப்ராகிம் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டதாக திட்டமிட்டு பாகிஸ்தான் செய்தியை பரப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து இச்செய்தி உண்மையா என்பது குறித்து இந்திய புலனாய்வு ஏஜென்சிகள் புலனாய்வு செய்து வருகின்றன. ஆனால் இந்திய ராணுவம் தங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதி தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகளுடன் வேறு நாட்டிற்கு சென்று விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
