• May 12, 2025
  • NewsEditor
  • 0

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு, ஓபிசி இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு

முதல்வருக்கு மனமில்லை

மாநாட்டில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னிய சமுதாயம். நெருப்பில் வந்தவர்கள் நாம். இந்தியாவிலேயே நம் சமுதாயத்துக்கு மட்டும்தான் புராணம் இருக்கிறது. காரணம் நாம் வன்னியர் குல சத்ரியர்கள். ஆளும் கட்சிகளெல்லாம் இந்த சமுதாயத்தை வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1,000 நாள்களுக்கு மேலாகியும் 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை வழங்க முதல்வருக்கு மனமில்லை.

எவ்வளவு காலம்தான் எங்களை கெஞ்ச வைப்பீர்கள்?

உங்கள் வரலாற்றை நீங்கள் தெரிந்துள்வதற்காக இந்த மாநாடு போடப்பட்டிருக்கிறது. ஏனெனில் நீங்க யார் யார் பின்னாடியோ போய்க்கொண்டிருக்கிறீர்கள். அடுக்கு மொழியில் பேசினால் போகிறீர்கள். சினிமாக்காரர் பின்னாடி போகிறீர்கள்.

இந்த மாநாட்டின் முக்கியமான கோரிக்கை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்துவிட்டது, தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்துவாரா முதலமைச்சர்? எவ்வளவு காலம்தான் எங்களை கெஞ்ச வைப்பீர்கள். இவ்வளவு காலமாக மனு கொடுத்துக்கொண்டிருந்த நாம், இனி மனு வாங்குகின்ற சமுதாயமாக மாற வேண்டும். நீங்கள் நினைத்தால் அது நடக்கும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

எண்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா அம்மையார் தமிழ்நாட்டுக்கு செய்த மிகப்பெரிய சாதனை 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு. அதற்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. இதைப்பற்றி முதலமைச்சருக்கு துளியும் கவலை இல்லை. இன்று நான் முதலமைச்சராக இருந்திருந்தால், தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயங்களும் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்திருப்பேன். ஆந்திரா, கர்நாடகா, பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால், நம் முதல்வருக்கு மட்டும் அதற்கு அதிகாரமில்லையாம்.

திட்டங்கள் இருக்கு… அதிகாரம்தான் இல்லை!

கேரளாவில் மக்கள்தொகையில் இரண்டரை சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் சமுதாயத்துக்கு தனி இட ஒதுக்கீடு இருக்கிறது. கலைஞர் இருந்திருந்தால் ஒரே கையெழுத்தில் கணக்கெடுப்பு நடத்தி எல்லோருக்கும் கொடுத்திருப்பார். இந்த மக்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் சோறு சாப்பிட முடியாது. அவ்வளவு பெரிய சமுதாயம் இன்று படிப்பறிவில்லாமல், கூலி வேலை செய்துகொண்டு மதுவுக்கு அடிமையாகியிருக்கிறது. நீங்கள் (அரசு) வேலை கொடுத்தால் ஏன் மதுக்கடைக்கு சொல்லப்போகிறார்கள்…

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

வட தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை ஓகோ என இருக்கிறது. இதை மாற்ற எங்கள் பின்னால் வாருங்கள். என் பின்னால் வாருங்கள். நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் வேண்டும். எங்களிடம் எவ்வளவோ திட்டம் இருக்கிறது. ஆனால், அதிகாரம்தான் இல்லை. அதை மட்டும் நீங்கள் கொடுத்தால் தமிழ்நாட்டை சிங்கப்பூருக்கு நிகராக மாற்ற முடியும். அது எங்களால் மட்டும்தான் முடியும்.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *