
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல்வேறு பாடத்திட்டங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியான சான்றிதழ் படிப்புகளில் 18,968 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், தமிழியல் தொடர்பான பட்டயப்படிப்பில் 2,679 பேர், மேற்பட்டயப் படிப்பில் 2,151 பேர், பட்டப்படிப்பில் 1,906 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அயலக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான தமிழ் ஆசிரியர் பட்டய பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர்.