
விருச்சிகம் – குருப்பெயர்ச்சி பலன்கள்
1. குரு பகவான் ராசிக்கு 8-ல் வந்து அமர்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். இனம் காண இயலாதபடி இருந்து வந்த தடைகள் நீங்கும்.
2. பிரபல யோகாதிபதி எட்டில் சென்றும் மறைவதால், எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஏலச்சீட்டு, மியூச்சல் ஃபண்ட் போன்ற விஷயங்களில், பண-பரிவர்த்தனைகளில் அலட்சியம் கூடாது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்வது கூடாது.
3. இந்தக் காலக்கட்டத்தில், திடீர் பயணங்கள் இருக்கும். அதேபோல், வீண் பழிகள் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம்.
4. குடும்பத்தில் புதியவர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
5. குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். தடைகள், பிரச்னைகள் நீங்கி சுபகாரியங்கள் கூடிவரும். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள்.
6. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும் அளவுக்கு விமர்சனங்களும் வரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும்; அதேநேரம் செலவுகளும் உண்டு. உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும்.
7. குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்கும் வாய்ப்பு உண்டு. உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மா வழிச் சொத்து கைக்கு வரும். இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள்.
8. குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பண வரவு, திடீர் பயணங்கள் கூடிவரும். எனினும், புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது. பயணங்களாலும் பொருள் வரவுக்குச் சாத்தியம் உண்டு.
9. வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்திவிடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர், பழைய கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள்.

10. உத்தியோகத்தில், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். எனினும் அவரிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். புது வேலை வாய்ப்பு கிடைத்தால், யோசித்துச் செயல்படுவது நல்லது. கணினித் துறையினர், கலைத்துறையினருக்கு சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
11. சென்னை – மாமல்லபுரம் செல்லும் சாலையில் 42-வது கி.மீ அமைந்துள்ளது திருப்போரூர். முருகன், ஆகாயத்தில் போர் புரிந்த தலம் இது என்கின்றன புராணங்கள். சஷ்டி தினங்களில் குடும்பத்துடன் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் வீட்டில் குமார ஸ்தவம் துதிப்பாடல் படித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து கந்தக் கடவுளை வணங்குங்கள், சகல நலன்களும் உண்டாகும்.