
ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து UPSC/TNPSC -குரூப் 1,2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி முகாம் , கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (11/05/2025) நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர் .
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை சரக டி.ஐ.ஜி மருத்துவர் சசி மோகன் ஐ.பி.எஸ் பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசிய அவர், “சிவில் சர்வீஸ் தேர்வு எழுதணும்னு முயற்சி எடுக்குறவங்க , ஏற்கெனவே முயற்சி பண்ண ஆரம்பிச்சவங்க, இனிதான் முயற்சியே எடுக்கப் போறவங்க என நிறைய பேர் இருப்பீங்க. அவங்க அனைவருக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும்.
என்னால் செய்ய முடியுமா எனக் குழப்பங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் முதல் அடி எடுத்து வைப்பது தான் சிரமம் . இன்னைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்ததை உங்கள் முதல் அடியா வச்சுக்கலாம். இதிலிருந்து அடுத்து முன்னேறிச் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.” என்றார்.

மேலும், தேர்வுக்கான பயிற்சி குறித்தும் தேவையான அணுகுமுறை குறித்தும் தங்கள் அனுபவம் குறித்தும் மாணவர்களிடையே விரிவாக எடுத்துரைத்த அவர், பின்பு மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளித்து அவர்களின் குழப்பங்களுக்கு விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் UPSC மற்றும் TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து உரிய விளக்கமும் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் சத்யஸ்ரீ பூமிநாதன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.