
அரசியல்வாதிகள் மீதான முறைகேடு, ஊழல் வழக்குகள் நமக்குப் புதிதல்ல. அவர்களது அதிகாரம், பணபலத்தின் மூலம் அவ்வழக்குகள் காலம் காலமாக நீட்டிக்கப்படுவதும் புதிதல்ல. இறுதியில், அவற்றிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதும் புதிதல்ல. ஆனால், ‘இது அரிது’ எனும் வகையில், கர்நாடக பா.ஜ.க-வின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான கலி ஜனார்த்தன ரெட்டி மீதான சுரங்க முறைகேடு வழக்கில், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது, ஹைதராபாத் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். இது பலரையும் ‘நிஜமா?’ என்று கிள்ளிப் பார்க்க வைத்துள்ளது.
14 ஆண்டுகள் நடந்த சட்டவிரோத சுரங்க வழக்கு!
பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக இருந்த 2008 – 2011 காலகட்டத்தில் மந்திரியாக இருந்தவர், ஜனார்த்தன ரெட்டி. ஓபலாபுரம் கனிம சுரங்க நிறுவனம் (OMC – Obulapuram Mining Company) நடத்தி வந்த இவர், 2007 – 2009-ம் ஆண்டுக் காலகட்டத்தில், கர்நாடக – ஆந்திர எல்லையிலுள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் சுரங்க குத்தகை எல்லைக் குறியீடுகளை சேதப் படுத்தியதாகவும், சட்ட விரோதமாக சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு வைக்கப்பட்டது. அந்நிறுவனம்
29 லட்சம் டன் இரும்பு தாதுவை சட்டத்துக்குப் புறம்பாக எடுத்து விற்றதில் அரசுக்கு ரூ.884 கோடி வரி இழப்பு ஏற்பட்டதாக புகார் சொல்லப்பட்டது.
கலி ஜனார்த்தன ரெட்டி உட்பட கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க ரெட்டி சகோதரர்களான கருணாகர ரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டிக்கு சொந்தமான
ஓ.பி.சி நிறுவனம் செய்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இவ்வழக்கின் விசாரணையில், ஓ.எம்.சி நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த ஷெல் நிறுவனத்துடன் (GLATI) சேர்ந்துகொண்டு வரி ஏய்ப்பு செய்தது வெளிப்பட்டது. வருமான வரி சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணமோசடி கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, மத்திய மற்றும் ஆந்திர அரசுகளின் உத்தரவுகளைத் தொடர்ந்து, இவ்வழக்கு 2009-ல் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனார்த்தன ரெட்டி உட்பட ஓ.எம்.சி நிர்வாக இயக்குநர் பி.வி. னிவாச ரெட்டி, சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி.ராஜகோபால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருபானந்தம், அப்போதைய தெலங்கானா மாநில அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, 2022-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒய். ஸ்ரீலட்சுமி, சுரங்கத்துறையின் உதவி இயக்குநர் ஆர். லிங்க ரெட்டி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி, மூன்றரை ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற ஜாமீனில் வெளியில் வந்தார்.
தண்டனை விவரங்கள்..!
இவ்வழக்கில், 14 ஆண்டுகளுக்குப் பின், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 120பி (குற்றச்சதி), 420 (மோசடி), 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 468 & 471 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி, அவரின் மைத்துனர் ஓ.எம்.சி நிர்வாக இயக்குநருமான னிவாஸ் ரெட்டி, அப்போதைய சுரங்கம் மற்றும் புவியியல் உதவி இயக்குநரான ராஜகோபால், ரெட்டியின் தனி உதவியாளரான மெஹாபுஸ் அலி கான் ஆகியோருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சவிதா இந்திரா ரெட்டி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருபானந்தம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ரெட்டி சகோதரர்கள்… ஆடிய ஆட்டம் – ஒரு ரிவைண்ட்!
2008-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்ற பின்னர், சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் சுரங்கக் கொள்ளை உச்சம் தொட்டது. ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம் சுரங்கத் தொழில் தாண்டியும் அரசு நிர்வாகம் முழுக்க ஓங்கியது. எடியூரப்பாவின் ஆட்சியில் ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி, கருணாகர ரெட்டிக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவி, சோமசேகர ரெட்டிக்கு கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பதவி, இந்த ரெட்டி சகோதரர்களின் வலதுகரமான ராமுலுவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பதவி என மொத்தமாக அதிகாரத்தை கைப்பற்றினர்.
முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இருந்து வந்த அமைச்சர் ஷோபா கராந்த்லஜேவுடன் மோதல் ஏற்படவே, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி எடியூரப்பாவுக்கு ரெட்டி சகோதரர்கள் அழுத்தம் கொடுத்தனர். அவர் மறுக்கவே, பா.ஜ.க-வின் 40 எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் வளைத்து, சொகுசு விடுதியில் தங்க வைத்து, ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக மிரட்டினர். வேறு வழியில்லாமல் ஷோபாவை பதவி நீக்கம் செய்த எடியூரப்பா, தொலைக்காட்சி மூலம் ரெட்டி சகோதரர்களுக்கு கெஞ்சி வேண்டுகோள் விடுத்தது… இந்திய அரசியலில் மறக்க முடியாத காட்சி.
அராஜகங்கள் எல்லை மீறிச் சென்றதால், ரெட்டி சகோதரர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பா.ஜ.க நடிக்க, எடியூரப்பாவும் ரெட்டி சகோதரர்களும் பா.ஜ.க-விலிருந்து வெளியேறி சொந்தக் கட்சிகளைத் தொடங்கிய காட்சிகளும் அரங்கேறின. இத்தகைய சூழலில், 2013-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமராக்க ரெட்டி சகோதரர்களும் எடியூரப்பாவும் பா.ஜ.க-வுக்கு ஓடோடி வந்தனர். 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், `கட்சிக்கும் ஜனார்த்தன ரெட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றார் அமித் ஷா. ஆனால், பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலில் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்களான கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் இடது, வலது கரங்களின் பெயர்கள் நிரம்பியிருந்தன.
ஹெலிகாப்டர், தங்க சிம்மாசனம், வைரத்தில் எழுத்து!
எப்போதுமே செல்வத்தில் திளைத்தும் சர்ச்சையில் சிக்கியபடியும் இருக்கும் ஜனார்த்தன ரெட்டியின் பங்களாவில்,
2011-ம் ஆண்டு போலீஸார் சோதனை நடத்தியபோது, உட்புற நீச்சல் குளம், மசாஜ் பார்லர், ஹோம் தியேட்டர், விலையுயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர், சுமார் 30 கிலோ தங்கம், சுமார் 15 கிலோ எடையில் ஒரு தங்க சிம்மாசனம், அதில் வைரத்தில் பொறிக்கப் பட்டிருந்த ஜி.ஜே.ஆர் (GJR) என்ற அவர் பெயர்… எனச் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. ஜனார்த்தன ரெட்டி, 2016-ம் ஆண்டு தன் மகள் திருமணத்திற்கு ரூ.62 கோடிக்கு மேல் செலவு செய்ததும் பேசுபொருளாகியது.
சட்டமன்ற உறுப்பினர் பதவி என்ன ஆகும்?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்கிற அடிப்படையில், ஜனார்த்தன ரெட்டி உடனடியாக எம்.எல்.ஏ பதவியை இழக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப் படும். ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜனார்த்தன ரெட்டி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை அங்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகிவிடும்.
எப்போதுமே பரபரப்பாக இருக்கும் கர்நாடக அரசியல் சூழலில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஜனார்த்தன ரெட்டிக்கு, சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் அத்தனை அரசியல் கட்சிகளிலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
எது எப்படியோ… ‘நாங்கள் சுத்தம் சுயம்பிரகாசக் கட்சி’ என்று எப்போதுமே பிரஸ்தாபித்துக் கொள்ளும் பி.ஜே.பி-யும் மற்ற கட்சிகளைப் போல ஊழல் குளத்தில் மூழ்கி ‘முத்தெடுக்கும்‘ கட்சிதான் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, ஜனார்த்தன ரெட்டி மூலமாக ஆதார பூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளது