
கோவில்பட்டி: அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5-வது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலமையை இன்னொரு நாடு முடிவெடுப்பது இருப்பது ஏற்புடையது அல்ல. போர் நிறுத்தம் என்பதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஏப்.30-ம் தேதி முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். மே 22-ம் தேதி முதல் மீண்டும் ஒன்றியம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள் உள்ளேன். கடந்த 10 நாட்களில் சுமார் 200 கிராமங்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், பல்வேறு கிராமங்களில் இன்னும் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படாத காரணத்தால் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் இல்லாமல் காணப்படுகின்றன. இதில், தேவேந்திரகுல மக்கள் வாழும் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் இதே நிலைமை உள்ளது. இதுகுறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்.