• May 10, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. இந்த இணையத்தள குற்றத்தில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோரை அதிக சம்பளம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று வெளிநாடுகளில் இணைய தள குற்றத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கால் சென்டர் வேலை என்று அழைத்து சென்று இணையத்தள குற்றத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி கொடுமைபடுத்துகின்றனர். அவ்வாறு மும்பையில் இருந்து சென்ற மூன்று பேர் சீன கும்பலிடமிருந்து லாவோஸ் நாட்டில் இருந்து தப்பித்து வந்துள்ளனர். அவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளனர்.

மும்பையை சேர்ந்த செய்யத் ஜாகீர், சபன் சலீம், இஸ்மாயில் செய்யத் ஆகியோர் லாவோஸ் நாட்டில் இருந்து தப்பித்து வந்துள்ளனர். நண்பர்களான மூன்று பேரும் மும்பை மீராரோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து அப்பாஸ் கூறுகையில், ”எங்களை முதலில் பேங்காக் அழைத்து சென்றனர். அங்கிருந்து படகு மூலம் லாவோஸ் அழைத்து சென்றனர். லாவோஸ் சென்றதும் எங்களது பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு சீன கும்பலிடம் தலா ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டனர். நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த அப்பாவிகளிடம் டேட்டிங் ஆப் மற்றும் முதலீட்டு ஆப்களை பயன்படுத்தி பணம் பறிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

சைபர் கொள்ளை

எங்களிடம் ஐபோன் கொடுத்தனர். எங்களை பாதுகாப்பு மிக்க ஒரு இடத்தில் சிறிய அறையில் அடைத்து வைத்திருந்தனர். எங்களுக்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு மிகவும் மோசமாக இருந்தது. பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்த நேரத்தில் 17 ஐபோன்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியில் தப்பித்து வந்தேன். வெளியில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியாகும். சாலை, சாப்பாடு, தங்குமிடம் என எதுவும் இல்லை. எப்படியாவது இந்தியாவிற்கு சென்றால் போதும் என்று காட்டிற்குள் நடந்து சென்று தப்பித்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தேன்”என்று தெரிவித்தார்.

இதே போன்று இஸ்மாயில் என்பவர் தப்பித்து வந்தது குறித்து கூறுகையில், ”நான் 6வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு கம்ப்யூட்டர் இயக்க தெரியாது என்று ஏஜெண்டிடம் கூறினேன். ஆனாலும் வேலை எளிது என்றும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் கூறி என்னை அழைத்து சென்றனர். அங்கு சென்றபிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்தது. நான் ஒரு வாரம் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து எனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்தேன். எனது நண்பர்கள் நான் திரும்பி வர உதவி செய்தனர்”என்றார்.

மூன்றாவது நபரான சலீம் இது குறித்து கூறுகையில்,”பல நாள் சாப்பிடாமல் ரத்தவாந்தி எடுத்தேன். எனக்கு சிகிச்சையளிக்க பணம் கொடுக்க மறுத்தனர். இந்தியா செல்ல உதவும்படி கெஞ்சினேன். எனக்கு சம்பளமும் கொடுக்கவில்லை. அவர்களிடமிருந்து தப்பித்து வெளியில் வந்து தெருவோர வியாபாரிகள் கொடுத்த பழங்களை சாப்பிட்டுக்கொண்டு 15 நாட்கள் நடைபாதையில் உறங்கி போராடி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தேன்.

போலி ஐடியில் இருந்து தவறான வீடியோ பதிவு

எங்களுடன் வந்த லக்கி அலி இன்னும் அங்கு சிக்கி இருக்கிறார். நான் வெளிநாட்டிற்கு போகவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் எனது பழைய நண்பன் என்னை விற்பனை செய்துவிட்டான். லாவோஸில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவே கிடையாது. அவர்கள் அப்பாவிகளை மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இது போன்று அப்பாவிகளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று மோசடியில் ஈடுபட வைக்கும் நபர்களை தூக்கிலிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *