
2024-ம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது பிரமயுகம். இந்தப் படத்தில், மம்மூட்டியின் நடிப்பு, திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை சிறப்பாக அமைந்ததாகக் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது. ராகுல் சதாசிவன் இயக்கிய இந்தப் படத்தை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ தயாரித்தது.
தற்போது மீண்டும் சதாசிவம் இயக்கும் இரண்டாவது படத்தை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பெயர் ‘டைஸ் ஐரே’ எனப் படக்குழு இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரன், ” ‘பிரமயுகம்’ போன்ற படத்தின் மூலம், இந்திய திகில் படங்கள் என்ன சாதிக்க முடியும் என்பதைக் காட்டினோம். டைஸ் ஐரே திரைப்படம் பிரமயுகத்துக்கு அடுத்த படியாகும். இந்தப் படத்தின் மூலம் பிரணவ் மோகன்லால் ஒரு வலுவான முத்திரையைப் பதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

‘டைஸ் ஐரே’ என்றால்?
‘டைஸ் ஐரே’ என்ற சொற்றொடர் முதலில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பயன்படுத்தப்படும் 13-ம் நூற்றாண்டின் லத்தீன் பாடலில் இருந்து வந்தது. இதன் பொருள் இறுதித் தீர்ப்பு என்பதாகும். காலப்போக்கில், இந்த சொற்றொடர் பயம், அழிவு மற்றும் தெரியாதவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. திகில் அனுபவத்துக்கு இந்தத் தலைப்பு சரியாகப் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.
புதிய திகில் அனுபவம்
இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குனர் ராகுல் சதாசிவன், “’டைஸ் ஐரே’ திரைப்படம் எனது முந்தைய படைப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படம் புதிய அனுபவங்களை ஆராய்ந்து, இளைய தலைமுறையினரின் திகில் அனுபவத்துடன் இணைகிறது. இது ஒரு வித்தியாசமான பாணி என நம்புகிறேன்.
இந்திய திகில் படங்களை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிரபார்க்கிறோம்” என்றார்.