
சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன் என்ற கேள்வுகள் எழுப்பபடுகிறது.
பாகிஸ்தானுக்கு விடுவிக்கப்பட்டுள்ள இந்தக் கடன் இப்போது கேட்கப்பட்டது அல்ல. கடந்த மார்ச் மாதம் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஒப்பந்தத்தில் இந்தக் கடன் கொடுப்பதாக முடிவானது. இந்தக் கடன் தண்ணீர் வரி, மின்சார வரி, கார்பன் பயன்பாடு குறைப்பு போன்ற காரணங்களுக்காக கேட்கப்பட்டது.
இந்தக் கடனை பாகிஸ்தானுக்கு தருவதற்கு இந்தியா நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடனை ரத்து செய்ய இந்தியா கூறும் காரணங்கள் என்ன?
கடந்த 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. ஆனால், அது எதையுமே பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை. அவர்கள் செய்வதாக கூறியதைக் கூட செய்யவில்லை.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் தொடர்ச்சியாக அந்த நாட்டின் ராணுவத்தின் தலையீடு இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு இப்படி வழங்கப்படும் நிதி எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினர் நாடுகள் அல்லது நாடுகளின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்த 25 இயக்குநர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
ஒரு நாட்டிற்கு கடன் வழங்குவது சம்பந்தமாக முடிவு எடுக்க அவர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படும். நாடுகள் மற்றும் அதன் பிரதிநிதித்துவம் பொறுத்து சதவிகிதங்களின் அடிப்படையில் 25 பேருக்கும் வாக்குகள் கொடுக்கப்படும்.
இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கலாம் அல்லது கலந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அவ்வளவு தான். கடன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து எல்லாம் ஓட்டு போட முடியாது. அதனால், பாகிஸ்தானுக்கு கடன் அளிக்கும் வாக்கெடுப்பில் தனது எதிர்ப்பை தெரிவித்து இந்தியா கலந்து கொள்ளவில்லை.