
காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலால் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று இரவு முழுவதும் மாறி மாறி கடுமையாக தாக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது.
இதனால் எல்லையில் வசிக்கும் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால் இந்த கடுமையான பீதிக்கு மத்தியில் பஞ்சாப்பில் மூன்று புறமும் பாகிஸ்தான் எல்லையால் சூழப்பட்ட ஒரு கிராமம் போர்ப்பதட்டம் குறித்து எந்த வித கவலையும் இல்லாமல் இருக்கின்றனர். அமிர்தசரஸ் அருகில் உள்ள டாவோக் (DAOKE) என்ற கிராமம் இந்தியாவோடு ஒரு புறம்தான் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. மூன்று பக்கமும் பாகிஸ்தான் எல்லை இருக்கிறது.
DAOKE
இக்கிராமத்தை இந்தியாவோடு சிறிய குறுகிய சாலைதான் இணைக்கிறது. இச்சாலை துண்டிக்கப்பட்டால் இக்கிராம மக்களால் கிராமத்தில் இருந்து வெளியில் வர முடியாது. இக்கிராமத்தையொட்டித்தான் இரு நாடுகளையும் பிரிக்கும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கிராம மக்கள் எந்தவித போர்ப் பதட்டமும் இல்லாமல் கூலாக இருக்கின்றனர். கிராம மக்கள் போர்ப் பதட்டத்தை மிகைப்படுத்தி காட்டுவதாக தெரிவித்தனர். இரு நாடுகளையும் பிரிக்கும் முள்வேலி அருகில் இருக்கும் மரத்திற்கு கீழே இருந்து கொண்டு கிராம மக்கள் சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த குல்வந்த் சிங் கூறுகையில்,” எங்களது கிராமத்தை சிறிய சாலைதான் இந்தியாவோடு இணைக்கிறது. இந்த சாலையை பாகிஸ்தான் சேதப்படுத்திட்டால் எங்களது கிராமம் துண்டிக்கப்பட்டுவிடும். ஆனால் நாங்கள் கிராமத்தை விட்டு செல்ல மாட்டோம். இது எங்களது வீடு. எங்களை இந்திய ராணுவம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்களது குழந்தைகளை எங்களது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறோம்”என்றார்.
`இப்போது நிலைமை மாறிவிட்டது’
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1965 மற்றும் 1971ம் ஆண்டு போர்களை நேரில் பார்த்த இதே கிராமத்தை சேர்ந்த முதியவர் குர்னம் சிங் தற்போது இருக்கும் நிலை குறித்து பேசுகையில்,” இதற்கு முன்பும் இது போன்ற சூழ்நிலையை பார்த்து இருக்கிறோம். 1965, 71ம் ஆண்டுகளில் நடந்த போரில் போது எங்களை இங்கிருந்து வெளியேற்றினர். எல்லா இடத்திலும் ராணுவம் நிற்கும். அதை பார்த்தாலே போர் வந்துவிட்டது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எங்களது அன்றாட செயல்களில் எந்த வித மாற்றமும் இல்லை. நாங்கள் வழக்கமாக எங்களது தோட்டத்தில் வேலை செய்கிறோம். ஆனால் இப்போது ராணுவம் மிகவும் குறைவாக இருக்கிறது”என்றார்.
இது குறித்து விவசாயி தர்மேந்தர் சிங் கூறுகையில், ”அமிர்தசரஸை சுற்றி எங்கும் வெடிகுண்டு சத்தம் கேட்டுக்கொண்டது. மிகவும் பயமாக இருக்கிறது. போர் தவிர்க்க முடியாததாக தெரிகிறது. ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை” என்று சர்வ சாதாரணமாக தெரிவித்தார்.

எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது
இக்கிராமத்தில் 2200 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இக்கிராமம் அருகில் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு பாகிஸ்தான் எல்லை இருக்கிறது. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள மஹாவா என்ற கிராமத்தை சேர்ந்த குர்தேவ் இது குறித்து கூறுகையில், ”1971ம் ஆண்டு போரின் போது ராணுவம் எங்களது கிராமத்தில் இருந்தது. எங்களது தோட்டம் வழியாக டேங்குகள் சென்றன.
ஆனால் இப்போது தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. தற்போது ராணுவத்தை எங்களது கிராமத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.
பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் காஷ்மீரில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளையும், தங்களையும் பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்பதட்டம் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.