கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, கத்தோலிக்க மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார்.

இவரது மறைவையடுத்து, ‘அடுத்து போப் யார்?’ என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் வாக்கெடுப்பில், போப்பாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதனால், ரகசிய வாக்கெடுப்பு நேற்றும் தொடர்ந்தது. அந்த வாக்கெடுப்பில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் அடையாளமாக, ரகசிய வாக்கெடுப்பு நடந்த வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் வெண்ணிற புகை வெளியேற்றப்பட்டது.

இந்த ரகசிய வாக்கெடுப்பில் 133 கார்டினல்கள் கலந்துகொண்டனர்.

வெண்ணிற புகை வெளியேற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே, புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காம் லியோ மக்கள் முன் தோன்றினார்.

போப் பதினான்காம் லியோ
போப் பிரான்சிஸ் – போப் பதினான்காம் லியோ

யார் இந்த பதினான்காம் லியோ?

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்தவர் பதினான்காம் லியோ. இவரது இயற்பெயர் ராபர்ட் பிரிவோஸ்ட் ஆகும். இவரது வயது 69.

போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தங்களது பெயரை மாற்றிக்கொள்வது மரபு. அதன்படி, ராபர்ட் பிரிவோஸ்ட் என்கிற தனது பெயரை, ‘பதினான்காம் லியோ’ என்று மாற்றியுள்ளார் புதிய போப்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர். அதாவது, இதுவரை வட அமெரிக்காவிலிருந்து யாரும் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவரே வட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இவரை கார்டினலாக நியமித்தார் அப்போது போப்பாக இருந்த போப் பிரான்சிஸ்.

போப் பிரான்சிஸ் இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்ததாகவும், அவர் போப் லியோவைச் சிறந்த தலைவராகக் கருதியதாகவும் கூறப்படுகிறது.

போப் பதினான்காம் லியோவுக்கு காலநிலை மற்றும் சேவை இரு கண்கள்.

போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியே வந்து மக்களிடம் உரையாற்றிய போப் லியோவின் முதல் பேச்சின் மையம் ‘அமைதி’யைச் சுற்றியே இருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *