
நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளது.
இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, அதுகுறித்து விளக்க இன்று அனைத்துக் கட்சி சந்திப்பை நடத்தியது மத்திய அரசு.
இந்த சந்திப்பில் மத்திய அரசு சார்பாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர், ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சந்திப்பை தலைமை தாங்கினார்.
எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பாக டி.ஆர். பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளிடம் ராஜ்நாத் சிங் விளக்கினார்.
“ஆபரேஷன் சிந்தூரில் கிட்டத்தட்ட 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு எண்ணிக்கை தெரியவரும். பாகிஸ்தான் எதிர்வினை ஆற்றினால் இன்றி, இந்தியா மேலும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அதனால், இப்போதைக்கு அதுகுறித்த அனைத்து தகவல்களையும் கொடுக்க முடியாது,” என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நடந்த எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மோடி கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து தொடர்ந்து கார்கே கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:
மத்திய அரசு என்ன சொன்னார்களோ அதை கேட்டோம். சில ரகசிய தகவல்களை வெளியே சொல்ல முடியாது. அவர்களிடம் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளோம்.
மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி:
நாங்கள் எப்போதும் மத்திய அரசுடன் இருப்போம் என்று சொல்லியிருக்கிறோம். மல்லிகார்ஜுன கார்கே ஜி சொன்னதைப்போல, அவர்கள் பகிர்ந்த சில தகவல்கள் குறித்து இங்கே பேச முடியாது.

AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி:
இந்திய ராணுவத்தையும், மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டினேன். ‘தி ரெசிஸ்டென்ட் ஃபிரன்ட்’ எதிரான பிரசாரத்தை உலக அளவில் முன்னெடுக்க வேண்டும். இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா கருத வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வேண்டும். FATF-ல் பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ:
அனைவரும் ஒற்றுமையாக செயல்படும் இந்த நேரத்தில் அனைத்து தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டியுள்ளனர். அனைவரும் ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டினர் மற்றும் மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்கள். மேலும், அவர்கள் அரசுக்கு சில பரிந்துரைகளையும் கொடுத்தார்கள்.