
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அப்போதெல்லாம் எனக்கு ஹிந்தியில் “கானா,பானி” (சாப்பாடு,தண்ணீர்) என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறெதுவும் தெரியாது.
கூடுதலாக “கப்டா” (துணி) என்ற வார்த்தையை தெரிந்து வைத்துக் கொண்டதால் எனது டெக்ஸ்டைல் துறை சார்ந்த பணி நிமித்தமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்திற்குச் சென்று மாதக்கணக்கில் தங்கியிருக்கிறேன். அச்சமயங்களில் ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையன்றும் அமிர்தசரஸ் பொற்கோயில், ஜாலியன் வாலாபாக்,வாஹா எல்லை, ஜலந்தர், சண்டிகர் என பல பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளேன்.
ஆனால் எனது கனவுப் பிரதேசமான காஷ்மீர் மண்ணை ஒரு முறையாவது மிதித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நீண்ட நாட்களாக ஈடேறாமலேயே இருந்து வந்தது.
அந்தவொரு நல்வாய்ப்பு 2023ஆம் மார்ச் மாதத்தில் ஒரு ஞாயிறுக்கிழமையன்று எனக்கு வாய்த்தது.
இமயத்தின் அடியைப் பார்த்து விட வேண்டும்;
கொஞ்சம் மலையேற்றம் இருந்தால் நல்லது;
குளிர்ந்த நன்னீர் தீரத்தில் நீராட வேண்டும்;
ஆன்மீக தரிசனமும் சேர்ந்தால் புண்ணியம்; ஒரே நாளில் இத்தனையும் சாத்தியமாகுமா என்று கூகுளில் தேடினேன்.எனது தேடல் அனைத்தையும் பூர்த்தி செய்யும்படி கிடைத்த இடம்தான் ஜம்முவின் உதம்பூர் மாவட்டத்தில் கத்ரா நகரில் அமைந்திருக்கும் மாதா வைஷ்ணவிதேவி ஆலயம்.
இடத்தை முடிவு செய்ததும் மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல் குருட்டு தைரியத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் லூதியானா பேருந்து நிலையத்திலிருந்து ‘ஜம்மு’ என்று கையால் ஃபோர்டு எழுதப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
பேருந்தைப் பார்த்தால் முன்னூற்று அம்பது கிலோமீட்டர் பயணத்தைத் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமாக இருந்தது.
பேருந்தின் சீட்கள் நிரம்பியதும் வண்டி கிளம்பியது.

வெள்ளை நிறத்தில் நீண்ட குர்தாவும் ஸ்கூல்பேக் போல ஒரு பையும் வைத்திருந்த கண்டக்டர் என் அருகில் வந்ததும், ‘ஜம்மு ஏக் டிக்கெட்’ என்று கேட்டேன்.
“அமிர்தசரஸ் அமிர்தசரஸ்” என்று குறிப்பிட்டு கண்டக்டர் ஏதோ என்னிடம் சொன்னார். எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. ‘ஜம்மு ஏக் டிக்கெட்’ என்ற பல்லவியை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன் நான். அவர் தலையில் அடித்துக் கொண்டு முன்னூறு ரூபாய்க்கு டிக்கெட்டை கிழித்து கொடுத்து விட்டு போய்விட்டார்.
அழகான சட்லஜ் ஆற்றினைக் கடந்து, கோதுமை வயல்களின் நடுவே தேசிய நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்தது பேருந்து.
காதில் இளையராஜாவின் மெலோடியை இசைக்க விட்டு, அதில் சொக்கிப்போய் கண்ணயர்ந்து போனேன். விழிப்பு வந்த போது பேருந்தை இருட்டு கவ்வியிருந்தது.
நேரம் இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்த போது பஸ் அமிர்தசரஸை அடைந்தது.
பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் அங்கேயே இறங்கிச் சென்று விட்டனர்.
கண்டக்டர் டிரைவரும் பேருந்திலிருந்து இறங்கி அருகிலிருந்த ஒரு ‘தாபா’ ஹோட்டலுக்குள் சென்று மறைந்தனர்.

எனக்கும் பசித்ததால் நானும் உள்ளே சென்றேன். ஹோட்டலுக்குள் வரிசையாக கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன.
கண்டக்டரும் டிரைவரும் தங்களது சட்டைகளை கழற்றிவிட்டு ஒரு கயிற்றுக் கட்டில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அவர்களின் நடுவே பலகை போடப்பட்டு தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த சோளரொட்டிகளைப் பிய்த்து தாலில் முக்கி இருவரும் தின்று கொண்டிருந்தனர்.
நான் அவர்களிடம் போய் உடைந்த ஹிந்தியில் பஸ் எப்போது கிளம்புமெனக் கேட்டேன். 12 மணிக்கு மேல்தான் கிளம்பும் என்றனர். இதைத்தான் முன்னரே அந்த கண்டக்டர் சொல்லியிருப்பார் போல என நான் இப்போது நினைத்துக் கொண்டேன்.
அவர்களிடம் மேலும் பேச்சு கொடுத்தபோது, காலை 5.00மணிக்குள் ஜம்முவிற்கு போய் சேர்ந்து விடலாம் என அவர்கள் உறுதியளித்ததன் பேரில் நான் நிம்மதியடைந்தேன்.
பக்கத்தில் இருந்த இன்னொரு கயிற்றுக் கட்டிலில் நான் அமர்ந்து கொண்டு இரண்டு ரொட்டிகளை வாங்கி சன்னா மசாலாவைத் தொட்டுக்கொண்டு விழுங்கினேன்.

பஞ்சாப் கோடை இரவின் இதமான குளிரும், தந்தூரி அடுப்பின் வெம்மையும் கயிற்றுக் கட்டிலும் நித்திரா தேவியை என்னிடம் இழுத்து வர, கண்டக்டர் டிரைவருடன் சேர்ந்து நானும் ஒரு கட்டிலில் சாய்ந்து தூக்கத்தில் ஐக்கியமானேன். இடம் பொருள் நேரம் அறியாத தூக்கம்.
சொல்லி வைத்தது போல பன்னிரெண்டு மணிக்கு கண்டக்டர் என்னை உசுப்பி வண்டியில் ஏறச் செய்தான். இப்போது பத்துப் பதினைந்து பேர் பேருந்தில் சேர்ந்திருக்க வண்டி கிளம்பியது. இமய வரம்பின் குளிர்காற்று பேருந்தின் ஜன்னல் இடுக்கின் வழியே புகுந்து மேனியை சிலிர்க்கச் செய்தது.
ஒரு வழியாக அதிகாலை 4.30 மணியளவிற்கு பேருந்து ஜம்முவிற்கு வந்து சேர்ந்தது. பேருந்து நிலையத்தில் ஜனநடமாட்டமே இல்லை. ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டும் நின்று கொண்டிருந்தன. ஒரேயொரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. குளிருக்கு இதமாக ஒரு டீ வாங்கி அருந்தியபடியே என் செல்போனைத் திறந்து பார்த்த எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மொபைலின் இரண்டு சிம்மிலும் சுத்தமாக டவர் எதுவும் காட்டவில்லை. ரீ-ஸ்டார்ட் செய்து பார்த்தும் டவர் வரவில்லை.
எனக்கு கையொடிந்தது போல் ஆகி விட்டது. இங்கே ஜம்மு வருவதை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நண்பர்களிடமும் சொல்லவில்லை. திடீர் பயணம்.இப்போது இங்கே எதுவும் அசம்பாவிதம் நடந்து விட்டால்?.

வாழ்க்கையில் முதல்முறையாக நட்டாற்றில் தனித்து விட்டது போன்ற ஒரு பயத்தை உணர்ந்தேன்.
“சமாளித்துக் கொள்வோம்” என மனதைத் தேற்றிக்கொண்டு, “கத்ரா” செல்லும் பேருந்து நிற்குமிடம் விசாரித்து பேருந்தில் ஏறினேன்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பொழுது பளபளவென விடிய ஆரம்பித்தது. ஜம்முவில் இருந்து கத்ரா செல்லும் அந்த அதிகாலை சாலைப் பயணத்தின் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
நமது ஊரில் சில நாட்கள் மாலையில் சூரியன் மறையும் போது ஒரு பொன் மஞ்சள் வெய்யில் ரம்மியமாக இருக்கும்.அதே பொன் வெய்யிலின் பிரதிபலிப்பை நான் அங்கே காலையிலேயே கண்டேன்.
தரமான நெடுஞ்சாலைகள், எல்லாம் சமீபத்திய கட்டமைப்புகளாகத் தெரிந்தன. மலைகளின் பக்கவாட்டுகளைச் செதுக்கி, நிலச்சரிவுகளைத் தடுக்கும் சுவர்களை அமைத்து, இயற்கை அழகு செறிந்து கிடக்கும் பெரும் பள்ளத் தாக்குகளைக் கடக்க பெரிய பாலங்களை கட்டமைத்திருந்தனர்.
அந்த நாற்பது கிலோமீட்டர் தூரமானது பயண விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் அத்தனை இயற்கை மற்றும் செயற்கை அழகால் நிறைந்திருக்கிறது.

காலை 7.00 மணிக்கெல்லாம் பனிப்புகை சூழ்ந்த மலையடிவார நகரமான கத்ராவின் பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். பஸ்ஸிலிருந்து இறங்கும் போதே ஒரு நல்ல விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கே வரிசையாக டேபிளில் கடை விரித்து அனைத்து ப்ராண்ட் “டூரிஸ்ட் சிம் கார்டு”களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தனர். பிற மாநில “ப்ரி பெய்டு சிம் கார்டுகள்” காஷ்மீரில் இயங்காது என்ற விவரம் அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது.
நல்லவேளையாக ஆதார் கார்டை கைவசம் வைத்திருந்தேன்.
இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு தற்காலிக சிம் கார்டை வாங்கி மொபைலில் போட்டு வீட்டுக்கு போன் செய்து எனது பயண விவரங்களைச் சொல்லியபின்தான் தனிமை பயம் நீங்கி நிம்மதியாக இருந்தது.
கண்ணால் அளவிடமுடியாத இமயத்தை வியந்து பார்த்தபடியே மலையடிவாரத்தை நெருங்கினேன்.
பக்தர்கள் கூட்டம் சீரான அளவில் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மலையடிவாரத்தில் உள்ள “Devotees Frisking Point” என்னும் சோதனை மையத்தை அடைந்தேன். அங்கே அனைவரும் கையிலிருந்த பேப்பரையோ அல்லது மொபைலையோ காட்டிவிட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் சோதனையைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். என்னிடம் எந்த பேப்பரும் இல்லை.
அருகே நின்று கொண்டிருந்த ஆங்கிலம் தெரிந்த ஒருவரிடம் விசாரித்த போதுதான் இந்தக் கோவிலுக்குச் செல்ல ஆன்லைன் “ரிஜிஸ்ட்ரேசன் பாஸ்” கட்டாயம் என்பது தெரிய வந்தது. நான் புரியாமல் விழித்த போது அவர் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார்.
அங்கே ஆதார் கார்டை வைத்து உடனுக்குடன் பாஸ் பிரிண்டவுட் எடுத்துக் கொடுத்தார்கள். (நாமே ஆன்லைனில் Shri Mata Vaishno Devi shrine board என்ற வலைத்தளத்தில் யாத்திரை மற்றும் மேலே தங்குமிடத்தையும் புக் செய்து கொள்ளலாம்.
பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பார்கள் என்பதால் முன்னரே ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு கத்ரா பயணம் செல்வது நல்லது).
சோதனைச் சாவடியில் செக்கிங் கெடுபிடியாக இருந்தது. என் பையில் இருந்த ஒரு பால்பாயிண்ட் பேனாவும், சிறு பென்சில் கத்தியும் அங்கிருந்த குப்பைத்தொட்டிக்குச் சென்று விட்டது.
சோதனைச் சாவடியிலிருந்துதான் மலையேற்றம் தொடங்க ஆரம்பிக்கிறது.கோயில் அமைவிடம் 5200 அடி உயரம் என்றும் 12 கிலோமீட்டர் தூரம் மலையேற வேண்டுமென்றும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலே செல்லச்செல்ல ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் பயணிகளுக்கான சில ஆலோசனைகளும் அவசரகால தொடர்பு எண்களும் போர்டில் எழுதப்பட்டிருந்தன.
நான் மலையேற ஆரம்பிக்கும்போது காலை 8.00மணி. சிறிது தூரம் நடந்ததும் நான் கூகுளில் பார்த்து வைத்திருந்த “பான்கங்கா” என்னும் புனித தீர்த்தமான சிற்றாறை அடைந்தேன்.ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீர் பளிங்கு போல சுத்தமாக சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.அருகிலிருந்த டாய்லட்டிற்கு போய்விட்டு வந்து ஆற்றுப்பக்கம் வந்தேன்.
படித்துறையில் இறங்காமல் சிறிது தூரம் தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இறங்கினேன்.

சேறு சகதி எதுவும் இன்றி பாறையும் குழாங்கற்களும் நிரம்பியிருந்த அந்த ஆற்றில் என் பாதத்தை வைத்ததும்
தீப்பற்றியது போன்றதொரு குளிர் என் மூளையில் மின்னல் வெட்டியது.
பனியிலிருந்து உருகி வரும் நீர் வேறு எப்படி இருக்கும்.
நீண்ட நேரம் கரையில் யோசித்தபடியே நின்று கொண்டிருந்த நான், அந்த ஆற்றின் குளிர் ஏமாந்திருந்த ஒரு தருணத்தில் நீரில் பாய்ந்தேன். சிறிது நேரப் போராட்டத்தில் அக்குளிரை முழுவதுமாக வென்று நீரின் தட்பத்துக்கு உடலைச் சமப்படுத்தி மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி எழுந்தேன். அரைமணி நேரம் நீராடி வெளியே வந்தபோது உடலும் மனதும் சிக்கெடுத்தது போல இருந்தது.
நீராடி முடித்ததும் கபகபவென பசித்தது.
நடைவழிக் கடையில் இரண்டு ரொட்டியும் ஒரு சாயாவும் வயிற்றில் போட்டுவிட்டு மேலும் நடையைத் தொடர்ந்தேன்.
நடக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் நடந்தே செல்லலாம்.நடக்க இயலாதவர்கள் குதிரைகள், மட்டக்குதிரைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். வயதானவர்கள் உட்கார்ந்து கொண்டு பயணிக்க ஏதுவாக சேர் அமைப்பில் டோலி வசதியும் உண்டு.குழந்தைகளையும் வயதானவர்களையும் உட்கார வைத்து தள்ளிக்கொண்டு செல்ல டிராலிகளும் வாடகைக்கு கிடைக்கிறது.

இத்தனைக்கும் மேலாக அடிவாரத்திலிருந்து மேலே பறந்து செல்ல ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. இத்தனை வசதிகளையும் பெறுவதற்கு யாரிடமும் பேரம் பேசத் தேவையில்லை. அனைத்தும் மலையடிவாரத்தில் இருக்கும் தேவஸ்தான ஆபிஸில் தேவைப்படும் வசதிக்கேற்ப குறிப்பிடப்பட்ட தொகையைச் செலுத்தினாலே போதும். வரிசைக்கிரமப்படி குதிரைக்காரனோ ஹெலிகாப்டரோ நம்மை அழைத்துச் சென்று விட்டு விடுவார்கள்.
நான் நடைப்பயணத்தையே தொடர்ந்தேன்.
மாதா வைஷ்ணதேவி கோவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் என்றும் 108 சக்தி பீடங்களில் ஒன்றாக சதி தேவியின் மண்டை ஓடு விழுந்த இடமாகவும் வணங்கப்படுகிறது.இங்கு தேவி சக்தியானவள் மஹாகாளி,மஹாலட்சுமி,மஹாசரஸ்வதி என முப்பெரும் தேவியர்களும் இணைந்த சக்தியாக பிண்ட வடிவில் காட்சியளிப்பதாக கோவில் வரலாறு கூறுகின்றது.மேலும் இக்கோவில் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும், அதிக வருமானம் பெறக்கூடிய கோவிலாகவும் திகழ்கின்றது.
பசுமை போர்த்திய மலைச்சரிவுகளைகளையும் பள்ளத்தாக்குகளையும் ரசித்தபடியே பனிக்கு இதமான வெய்யிலை அனுபவித்தபடி குதிரைகளுக்கும் டோலிக்காரர்களுக்கும் வழிவிட்டபடி சீரான பொடிநடையாக நான் மலையேறிக் கொண்டிருந்தேன்.
இடையிடையே கெட்டியான லஸ்ஸி, ராக் சால்ட் போட்ட எலுமிச்சை சாறு, சீவி வைக்கப்பட்ட தேங்காய் பத்தைகள், வருத்த கொண்டைகடலைகள் என வயிற்றை நிரப்பியபடியே சென்றேன். வழியெங்கும் “பான்கங்கா” வின் சுவையான தண்ணீர் குழாய்களில் வந்து தாகம் தீர்ந்தது.நடப்பவர்கள் ஓய்வெடுக்க கால் மசாஜ் செய்ய சோபா போன்ற ஓய்வெடுக்கும் ஸ்டால்களும் வழிநெடுக கடைகளும் இருந்தன.

பனினோரு மணியளவில் பாதி தூரத்தைக் கடந்திருந்தேன். இடையிடையே வந்த சிறு கோவில்களில் தரிசனம் செய்தபடியே சென்றேன்.சிலர் பஜனைக் குழுக்களாக பக்திப் பாடல்களை பாடியபடியே நடந்து கொண்டிருந்தனர்.ஒவ்வொரு பாடல் முடிந்த பின்பும் “ஜெய் மாதா தி.. ஜெய்” எனறு ஒருவர் சொல்ல கூட்டமே உரக்க கத்தும் ஓசை அந்த மலை முழுவதும் எதிரொலித்து சுற்றிச்சுற்றி வந்தது.
ஒவ்வொரு ஹெலிகாப்டரும் மலைப்பாதையே நெருங்கிப் பறக்கும் போது சிறுவர்களும் இளைஞர்களும் ஹோவென கத்தி ஆரவாரம் செய்வதும் கையசைப்பதுமாக குதுகலமாக நடந்து கொண்டிருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் பசியெடுக்கும் நேரத்தில் “போஜனால்” என்ற தேவஸ்தான உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். பஞ்சாபில் மூன்று வேளைகளும் வெறும் ரொட்டியாகவே தின்று நொந்து கிடந்த எனக்கு மலை உச்சியில் சுடச்சுட அரிசிச்சோறும் ராஜ்மா என்ற பெரிய தட்டைப்பயிரில் செய்த குழம்பும் ஊறுகாயும் விலை மலிவாகக் கிடைத்தது ஆச்சர்யமாகவும் மனநிறைவாகவும் வயிறு நிறைவாகவும் இருந்தது.

நண்பகல் 2.00 மணிக்கு கோவிலை அடைந்தேன்.சுற்றிலும் மலைகள் சூழ வெண்நிறத்தில் பெரிய பெரிய பெட்டிகளை சீராக அடுக்கியது போல விடுதிகளும் கோவில் வளாகமும் இருந்தன.கீழே கொடுத்த அனுமதிச் சீட்டை ஒரு கவுண்டரில் கொடுத்ததும் மாலை 3.30 மணிக்கு தரிசனம் என்று பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட் கொடுத்தார்கள்.
அதுவரைக்கும் நான் அருகிலிருந்த கோவில் வளாகம் முழுவதையும் சுற்றி பார்த்தேன். அவைகள் பளிச்சென சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
கோவிலுக்குள் மொபைல் அனுமதி இல்லாததால் பையையும் மொபைலையும் லாக்கரில் வைத்துவிட்டு தரிசன வரிசையில் வந்து நின்றேன்.மஞ்சள் செவ்வந்தி பூமாலைகளையும், ஜரிகை வைத்த செவ்வாடைகளையும் பெரும்பான்மையான பெண்கள் தாம்பாளத் தட்டுகளில் வைத்துக் கொண்டு வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இல்லாமலும் நெருக்கடி இல்லாமலும் வரிசை சீராக நகர்ந்தது. சில பக்தர்கள் மெதுவாக பாடல்களைப் பாடிக்கொண்டும் மந்திரங்களை முனுமுனத்துக் கொண்டும் நகர்ந்தனர். வரிசை சுற்றி சுற்றிப் போய் இறுதியாக ஒரு மலையின் குகை வாசலை அடைந்தது.
மலைப் பாம்புகள் போன்ற பெரிய பெரிய மர வேர்கள் மலைமேலிருந்து கீழிறங்கி அந்த குகை வாசலுக்குத் தோரணம் போல இயற்கையாகவே அலங்கரித்திருந்தன.பெரிய பெரிய அகில் பத்திகள் நறுமண புகையைப் பரப்பிக்கொண்டிருந்தன.
எனது செருப்பில்லாத பாதங்கள் வலுவலுப்பான குளிர்த்த பாறையின் குளிர்ச்சியை உணர்ந்து குறுகுறுத்தன.ஏதோ இனம்புரியாத ஏகாந்தமான இன்பம் என் மனதை நிரைத்திருந்தது.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் மனித எறும்பின் வரிசை சட்டென அந்த மலைக்குகைக்குள் புகுந்து விட்டது.இதோ இமயத்தின் வயிற்றுக்குள் புகுந்து விட்டோம்.முப்பது மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் உயரமும் கொண்ட இயற்கையில் அமைந்த குகை அது.வெண்பளிங்குக் கற்களால் அந்த குகையின் பக்கத் சுவர்களையும் கூரையையும் வேய்ந்திருந்தனர்.ஈரமும் குளிரும் அதன் வழியே ஊடுருவி கசிந்துருகி பக்தியாய் அங்கே சொட்டியது.
“ஜெய் மாதா தீ.. ஜெய்”.. என்ற பக்திப் பரவசக்கூச்சல் குகையைப் பிளந்தது போல் எதிரொலித்தது.
பக்தர்கள் வரிசை எந்த நெரிசலும் இல்லாமல் மெதுவாக ஒவ்வொரு அடியாக நகர்ந்தது.மெல்லிய மஞ்சள் விளக்கொளி குகைக்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தது.

சுமார் கால்மணி நேர நகர்வுக்கு பின் இதோ குகையின் முடிவிடம் வந்து விட்டோம். அங்கே இடது புறத்தில் குடைந்து செதுக்கப்பட்ட ஒரு மேடையில் அகல் விளக்கொளியில் செவ்வாடை போர்த்தி மஞ்சள் மலர்கள் சூடி தேங்காய் அளவில் வரிசையாக மூன்று உருண்டைப் பிண்டங்கள் இருந்தன.
முப்பெரும் தேவியர்கள் உருக்கொண்ட கருப்போல.திரி சூழத்தின் முனைகள் போல…மூவுலகம் என்பதே இவைகள்தானோ?. சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கக்கூட இடமில்லாத இந்த குகைக்குள் இந்த பெரும்சக்தி ஏன் குடிகொண்டது. இதைத் தரிசிக்க எந்த சக்தி என்னை இங்கு இழுத்து வந்தது..என் உடம்பின் ஒவ்வொரு செல்களும் புல்லரித்தன.
தீபாராதனை காட்டி நெற்றியில் செந்தூரம் இட்டனர் உள்ளிருந்த வேதியர்கள். நான் நூறு ரூபாயை அவர்களது தட்டில் போட்டேன்.
தீண்டக்கூடாத ஒன்றைப் பார்த்தது போல “இதை எடுத்துப் போ” என்று அவர்கள் கையசைத்து மறுதலிக்க, நான் பணத்தை திரும்ப எடுத்து வைத்துக்கொண்டு மறுபடியும் ஒருமுறை முப்பெரும் தேவியரை வணங்கி விட்டு திரும்பினேன்.
குகையிலிருந்து வெளியே திரும்பும் பாதையில் அம்மனுக்கு நேரெதிராக ஒரு பெரிய பொந்து போல சிறு குகை இருந்தது.அதனுள் எட்டிப் பார்த்தபோது கைதொடும் தூரத்தில் பெரும் நதியொன்று அருவி போல வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. பக்தர்கள் அதனுள் கைவிட்டு குளிர்ந்த அந்த நதியின் தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக் கொண்டு திருப்தியாக வெளியேறுகின்றனர்.
தரிசனம் முடித்து வெளிவரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வெள்ளிக் காசு ஒன்றும் கற்கண்டு பிரசாதமும் தேவஸ்தானத்தால் இலவசமாய் வணங்கப்படுகிறது.
வைஷ்ணவி தேவியைத் தரிசித்து விட்டு வெளியே வந்ததும் லாக்கரை காலி செய்துவிட்டு, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் உயரத்திலிருக்கும் “பைரோன் மந்திர்” என்ற கோவிலுக்கு மயிர்க்கூச்செரியும் செங்குத்தான ரோப் கார் பயணத்தில் சென்றடைந்தேன். போக வர இருவழிப் பயணத்திற்கு அம்பது ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தனர்.

உடம்பில்லாத கிடா மீசையுடன் இருக்கும் தலையை மட்டுமே இங்கு பைரோனாக வணங்குகின்றனர். இவர் வைஷ்ணோதேவியால் சம்ஹாரம் செய்யப்பட்டு பின் ரட்சிக்கப் பட்டவர் என்று கோவில் வரலாறு சொல்கிறது.
பைரோன் கோவிலிருந்து பார்த்தால் சுற்றிலும் பனிபடர்ந்த இயற்கைக் காட்சிகளும், மலையுச்சியில் அமைந்திருக்கும் அபாயகரமான ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் வந்து செல்லும் காட்சிகளும் பிரமிப்பூட்டுவையாக இருக்கும்.
இரண்டு கோவில்களையும் தரிசித்து முடித்து விட்டு மாலை 5.30 மணிக்கு மலையிறங்க ஆரம்பித்தேன்.
குதிரைப்பாதையில் இல்லாமல் செங்குத்துப் படிகள் வழியாக இறங்கியதால் இரவு 8.00மணிக்கெல்லாம் மலையடிவாரம் வந்து விட்டேன்.
மலையிறங்கி முடித்த ஆசுவாசத்தில் மலையடிவார டீக்கடை ஒன்றில் ‘அப்பாடா’ என்று அமர்ந்து பழக்க தோசத்தில் “அண்ணே ஒரு டீ” என்று சொல்லி விட்டேன்.
கடைக்காரர் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு டீயை தயார் செய்ய ஆரம்பித்தார்.
என் எதிரே அமர்ந்திருந்த வயதான தம்பதிகள் இருவர் என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தனர்.
“டோலி”யில் போய் திரும்பியிருப்பார்கள் போல என நினைத்துக் கொண்டேன்.
நான் ஏனோ பதிலுக்கு புன்னகைக்கவில்லை.
அவர்கள் என்னிடம் பேச்சுக்கொடுக்க விரும்பியது போல தெரிந்தது.
என் திராவிட சாயலைப் பார்த்து,
“நீங்கள் கேரள மாநிலமா?” என்று ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் கேட்டார் அவர்.
“நகி சாப்.. ஐ ஆம் தமிழ்நாடு..” என்றேன் நான்.
“தமிழ்நாடு…ம்ம்ம்” என்று யோசனையாக இழுத்தார் அவர்.
நான் அவருக்கு தெரியவில்லையோ என நினைத்து,
“சென்னை – மதராஸ்” என்று விளக்கினேன் நான்.
“மேரா உத்ரகாண்ட் இஸ்டேட்..
டமிள்நாடு மே ராமேஸ்வர்- மதுரா-கன்யாகுமரி விசிட்டேட் இன் இயர் 2015 – பஹூத் அச்சா மார்வலஸ் டெம்பிள்ஸ் ..” என்று சொல்லிவிட்டு அவரது மனைவியைப் பார்த்தார்.
அவரது மனைவி “ஓம் நமசிவாய” என்று வானத்தைப் பார்த்து கைகுவித்து ஆமோதித்தார்.அவர்கள் இருவரின் முகமும் அப்போது பெருமிதத்தோடு பூரித்திருந்ததை நான் கவனித்தேன்.
*********************
பின் குறிப்பு: 1).மழைக்காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை இங்கே நிலச்சரிவு அபாயங்கள் இருக்கும். 2).குளிர்காலமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் சில நாட்கள் கோவில் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும் என்கிறார்கள். 3).தென்னகத்தின் திருநெல்வேலியிலிருந்து மதுரை ஈரோடு வழியாக மாதா வைஷ்ணோ தேவி என்ற பெயரிலேயே வாராந்திர ரயில் ஓடுகிறது. 65மணி நேர நீண்ட பயணத்தில் வெறும் ரூபாய் 1055 கட்டணத்தில் படுக்கை வசதியில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.