
முட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்ற சந்தேகங்களுக்கு தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர் பதிலளிக்கிறார்.
”முட்டை, காபித்தூள், சர்க்கரையைக் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு, அதன் மேலே டிஷ்யூ பேப்பரை முகத்தில் ஒட்டி, காய்ந்ததும் பீல் ஆஃப் பேஸ் பேக் (peel off face pack) போல உரித்து எடுக்கிறார்கள். இது ஒரு சாண்ட் பேப்பரை (Sanding Paper) முகத்தில் ஒட்டி இழுப்பதற்கு சமம். அதனால், இந்தக் கலவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சர்க்கரை மற்றும் காபித்தூளை முகத்திற்கு ஸ்கிரப்பாகப் பயன்படுத்தினால் முகம் பளபளக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் பொருள்கள் தோலை சேதப்படுத்தவே வாய்ப்பு அதிகம்.
உணவுப் பொருள்களான முட்டை, சர்க்கரை மற்றும் காபித்தூள் போன்ற பொருள்களை முகத்தில் தடவினால் அரிப்பு, எரிச்சல் மற்றும் முகம் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், சிலருக்கு தோலில் அலர்ஜிகூட ஏற்படலாம். இதில் முட்டை இருப்பதால், சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட முரட்டு சிகிச்சை செய்யாமல், உங்கள் சருமத்தை மென்மையாகப் பராமரிப்பதே சரி.

இதற்கு பதிலாக, முகத்தில் ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் நீக்க மருத்துவர்கள் தரும் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சோதித்த பிறகுதான் மருந்தைப் பரிந்துரைப்பார்கள். இல்லையென்றால், அவற்றை நீக்குவதற்கு சரியான முறையில் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். முட்டை, காபித்தூள், சர்க்கரையைப் பயன்படுத்தி உரித்து எடுக்கிற அழகு சிகிச்சை வேண்டவே வேண்டாம்” என்கிறார், டாக்டர் நித்திலா சந்திரசேகர்.