
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்,இது குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் கூறியது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.