
‘சென்னை வெற்றி!’
சீசனின் க்ளைமாக்ஸில் ஒரு போட்டியை வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த சென்னை அணி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் கொல்கதா அணியை சென்னை வீழ்த்தியிருக்கிறது.
சென்னை அணிக்கென சில வரைமுறைகள் இருக்கிறது. அதாவது, 180 ரன்களுக்கு மேலாக எதிரணி அடித்திவிட்டாலே சென்னை அணிக்கு உதற தொடங்கிவிடும். கண்டிப்பாக அந்த டார்கெட்டை எட்ட முயற்சிக்க மாட்டார்கள். மெதுவாக உருட்டி ஆடி தோற்பார்கள்.
‘சென்னைக்கேற்ற போட்டி!’
ஆனால், இன்றைய போட்டி சென்னை அணிக்கு ஏற்ற வகையில் அமைந்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் கொல்கத்தா அணி பவர்ப்ளே முடிவில் 67 ரன்களை எடுத்திருந்து. குர்பாஸ் மட்டும்தான் அன்ஷூல் கம்போஜின் பந்தில் அவுட் ஆகியிருந்தார்.

இதனால் கொல்கத்தா அணி 200-220 ரன்களை நோக்கி செல்கிறதோ என தோன்றியது. ஆனால், 7-15 இந்த மிடில் ஓவர்களில் சென்னை அணி 57 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தது. குறிப்பாக சென்னை அணியின் ஸ்ட்ரைக் பௌலரான நூர் அஹமது சுனில் நரைன், அங்ரிஸ் ரகுவன்ஷி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரஸலும் நின்று ஆடி சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். அவரையும் நூர்தான் ஆட்டமிழக்கச் செய்தார். டெத் ஓவரில் சென்னை அணி அவ்வளவாக ரன்களை கொடுக்கவில்லை. கடைசி 5 ஓவர்களில் 56 ரன்களை மட்டுமே சென்னை அணி கொடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 179 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

சென்னை சேஸிங்
சென்னை அணிக்கு 180 ரன்கள் டார்கெட். அவர்களுக்கு ஏற்ற டார்கெட்தான். ஆனாலும் கொஞ்சம் சறுக்கினார்கள். குவியலாக விக்கெட்டுகளை விட்டனர். பவர்ப்ளேயில் சென்னை 62 ரன்களை எடுத்திருந்தது. நடப்பு சீசனில் சென்னை எடுத்த அதிகபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இதுதான். ஆனால், இன்னொரு ட்விஸ்ட்டும் நடந்திருந்தது.
பவர்ப்ளேக்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். பவர்ப்ளேயின் மிகப்பெரிய பாசிட்டிவ்வான விஷயம் உர்வில் படேல்தான். சென்னைக்கான தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே 11 பந்துகளில் 31 ரன்களை அடித்திருந்தார். பவர்ப்ளேக்குப் பிறகு மிடில் ஓவர்களில் டெவால்ட் ப்ரெவிஸ் அதிரடியாக ஆடி மொமண்டமை சென்னை பக்கமாக திருப்பினார்

வைபவ் அரோராவின் ஒரே ஓவரில் பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 30 ரன்களை சேர்த்தார். அரைசதத்தையும் கடந்தார். டெவால்ட் ப்ரெவிஸ் வருணின் பந்தில் அவுட் ஆகியிருந்தாலும் போட்டியை சென்னை பக்கமாக மாற்றிவிட்டார்.
டெவால் ப்ரெவிஸ் கொடுத்த அதிரடியால் தோனியும் துபேவும் நின்று நிதானமாக ஆடி இலக்கை நோக்கி முன்னேறினர். துபே வைபவ்வின் பந்தில் அவுட் ஆகியிருந்தாலும் தோனி கடைசி வரை நின்று போட்டியை எடுத்துச் சென்று வெற்றியை தேடிக் கொடுத்தார்.

ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தாலும் சீசனின் முடிவில் ஒன்றிரண்டு வெற்றிகளைப் பெற்று பாசிட்டிவ்வாக சீசனை முடித்தால் நன்றாக இருக்கும். அதைத்தான் இப்போது சிஎஸ்கே செய்திருக்கிறது.