“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” 2021 மே 7 அன்று காலை 9 மணிக்கு இந்த வார்த்தைகள் வந்து விழுந்தபோது அவையில் இருந்தவர்களின் கரகோஷமும், துர்கா ஸ்டாலினின் கண்ணீரும் சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது. 234 தொகுதிகளில் 159 தொகுதிகளை வென்று முதல் முறையாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் அரியணையில் அமர்ந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு

அவரின் முதல் பேச்சிலேயே, “பொதுவுடைமை – சமத்துவம் – சமூக நீதியை தி.மு.க அரசு உறுதியாகப் பின்பற்றும். அனைத்து தரப்பினரின் புகாரும், குறைகளும் கேட்கப்பட்டு, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு மக்கள் மைய அரசாக உறுதியாக இருக்கும்” என்றார்.

அதைத் தொடர்ந்து “Dravidian Model என்ற சொற்களின் மூலம் திட்டங்களையும் செயல்படுத்தத்தொடங்கினார்.

இன்றுடன் தமிழ்நாட்டின் முதல்வராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவியேற்று 4 வருடங்கள் முடிவடைகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் முதல்வராக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார். பல சர்ச்சைகளையும் இந்த அரசும், அதன் முதல்வரும் எதிர்கொண்டு இருக்கிறார்கள். அதில், மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்ற விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

மகளிருக்கான இலவசப் பேருந்து:

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு இலவச பயண திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தது. ஆட்சியை பிடித்த தி.மு.க தனது வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமான `விடியல் பயணம் திட்டம்’ தொடங்கப்பட்டது.

இலவச பேருந்து

இந்த திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் வேலைக்கு செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணத்தின் மூலம் சுமார் ரூ1,000 வரை சேமிக்க முடிகிறது எனக் கூறுகிறது அரசு.

எனவே இந்த திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மாநில அரசுகளும் இந்தத் திட்டத்தை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து செயல்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்!

‘கோயில் கருவறைகளில் தீண்டாமை கூடாது’ எனக் 2006-ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது.

தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கின் இறுதியில், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் சட்டம் செல்லும்’ என 2015-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

ஆனால், இந்த சட்டம் நடைமுறைக்கு வரலாமலே இருந்தது. இந்த நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற அதே ஆண்டு ஜூலை மாதம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது. பல்வேறு கோவில்களில் அனைத்து சாதிகளையும் சேர்ந்த 28 பேரை அர்ச்சகர்களாக அரசு நியமித்தது.

மக்களைத் தேடி மருத்துவம்

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் 8,713, நகர்ப்புரங்களில் 2,256 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் துணை சுகாதார மையங்களுடன் (HSC) இணைக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவம்

இன்னுயிர் காப்போம் திட்டம்:

தமிழ்நாட்டில் அதிக விபத்துகள் நடக்கும், 500 இடங்களைக் கண்டறிந்து, அதன் அருகில் உள்ள மருத்துவமனைகளில், இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்து நேர்ந்து முதல் 48 மணி நேரத்தில், மருத்துவமனையில் சேர்ப்போருக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள், 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

நான் முதல்வன் திட்டம்:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) கீழ் ”நான் முதல்வன்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு படிப்புகள் பற்றிய சமீபத்திய தகவல்கள், தொழில்துறைகளுக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் ஆகியவை குறித்து கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

‘நான் முதல்வன்’ திட்டம்

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41,38,833 பேர் பயன்பெற்ற நிலையில், அவர்களில் 25,63,235 பேர் கலை மற்றும் அறிவியல் படிப்பிலும், 10,91,022 பேர் பொறியியல் படிப்பிலும் பயன்பெற்றுள்ளனர். மேலும் தொழில்நுட்பக் கல்வியில் 3,77,235 பேரும், ஐடிஐ படிப்பில் 1,07,341 பேரும் பயன்பெற்றுள்ளனர் என நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை:

மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது தி.மு.க. ஆனால், ஆட்சி அமைந்தும், நிதிநிலை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.

2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக ரூ1000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.14 கோடி.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்:

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினால் 07.05.2022 அன்று தமிழக சட்டப் பேரவையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 15.09.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் உள்ள 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்:

“மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” என்ற திட்டம் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுதுறையால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் “புதுமை பெண் திட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில்,  6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே படித்து தற்போது கல்லூரியில் பயிலும்  மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதேப் போல அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட்

உலகின் மிகப்பெரிய செஸ் போட்டி நிகழ்வான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தப் பிறகு, அதாவது 2022-ம் ஆண்டு நடந்தது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை இந்தப் போட்டி நடைபெற்றது.

செஸ் போட்டி தொடக்க விழாவில்…

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் 2025 பிப்ரவரி 2 முதல் 9 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஃபார்முலா 4

தெற்காசியாவில் முதன்முறையாக, சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடைபெற்றது. ஃபார்முலா 4 (F4) இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (IRL- ஐஆர்எல்) என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்றும் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தின.

F4 Race – ஃபார்முலா 4

இதுபோன்ற தி.மு.க அரசின் இன்னும் சொல்லப்பட வேண்டிய பலத் திட்டங்கள் பாராட்டும் வகையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்ட திட்டங்களாக இருந்தாலும், இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் தி.மு.க அரசு பல்வேறு துறையிலும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது. அதையும் வரிசைப்படுத்த முயன்றால், முதலில் வருவது, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை.

லாக்கப் மரணம்:

2022 ஏப்ரல் மாதம் 19ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு ஏப்ரல் 26-ம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு கொலை வழக்கு பிரிவு, எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விக்னேஷ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணை கைதி விக்னேஷ்

அதே ஆண்டு ஜூன் மாதம் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்பு, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கும் விசாரைணையில் இருக்கிறது.

2024 ஏப்ரல் 05 முதல் 16 வரை மதுரையைச் சேர்ந்த ஜி. கார்த்திக், விழுப்புரத்தைச் சேர்ந்த கே. ராஜா, சென்னையைச் சேர்ந்த எஸ். சாந்தகுமார் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த எஸ். ஜெயக்குமார் எனத் தொடர்ந்த காவல்நிலைய மரணங்கள் தமிழகத்தை அதிரச் செய்தது.

தி.மு.க ஆட்சியில் தான் (2023) குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19 பேரின் பற்களை பிடிங்கி சித்திரவதை செய்த வழக்கில் பல்வீர் சிங் (Balveer Singh) ஐபிஎஸ் அதிகாரிமீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இடைநீக்கம் அரசு மூலம் ரத்து செய்யப்பட்டது.

பல்வீர் சிங்

திமுக ஆட்சி என்றாலே சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனம். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியை திரும்பி பார்த்தால் வரிசை கட்டுகின்றன சம்பவங்கள்…

வேங்கை வயல்:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு தமிழகமே ஸ்தம்பித்த வழக்கு வேங்கை வயல். 2022 டிசம்பரில் நடந்த சம்பவத்துக்குப்பிறகு, கிராம மக்களின் மீதான அடக்குமுறையில் தொடங்கி, காவல்துறை விசாரணை தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2025 மார்ச் 11 அன்று, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வேங்கை வயல்

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கும், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரமும் தமிழ்நாடு அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

ஐஸ்வர்யா கொலை (ஜனவரி 2024): திருப்பூரில், பட்டியல் சாதி இளைஞரான நவீனை திருமணம் செய்ததற்காக, 19 வயதான ஐஸ்வர்யா தனது பெற்றோரால் கொலை செய்யப்பட்டார்.

பிரவீன் மற்றும் சர்மிளா (பிப்ரவரி 2024): சென்னையில், பட்டியல் சாதி இளைஞரான பிரவீன், மாற்று சாதி பெண்ணான சர்மிளாவை திருமணம் செய்ததற்காக, சர்மிளாவின் சகோதரர் மற்றும் நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். பின்னர், சர்மிளா தற்கொலை செய்துகொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

கே. ஆம்ஸ்ட்ராங் (ஜூலை 2024): பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் மற்றும் தலித் சமூக செயற்பாட்டாளர் கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் டிஜிபி அலுவலகம் கொடுத்த தகவலின் அடிப்படையில், 2022-ம் ஆண்டு 1,597 கொலை வழக்குகள் பதிவாகின. 2023-ம் ஆண்டு 1,598 கொலை வழக்குகள் பதிவாகின. 2024-ம் ஆண்டு அதில் 1,489 கொலை வழக்குகள் பதிவாகின.

நெல்லையில் தீபக் ராஜா படுகொலை, பல்லடம் தோட்டத்து வீட்டில் வாசித்த முதியவர்கள் கொலை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலை உள்ளிட்ட முக்கியக் கொலை வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரானப் போராட்டம்:

திமுக அரசை எதிரத்துப் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றன. ஆனால், எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் தானாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மிகவும் கவனம் பெற்றது பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரானப் போராட்டம். 2022 ஆகஸ்ட்டில் கிராம மக்களால் தொடங்கப்பட்ட போராட்டம் இப்போதுவரை தொடர்ந்து வருகிறது.

பரந்தூர் விவகாரம்

அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர் மாவட்டம்)

2022-ல், 3,731.6 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் “நிலம் நமதே” என்ற பெயரில் போராட்டக் குழு அமைத்து, உண்ணாவிரதம், பேரணி, கடையடைப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்)

2023-ல், 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் 124 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் கைது செய்யப்பட்டு, 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர், அரசின் உத்தரவால் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம்

2023-ல், சிப்காட் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து, விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்!

கள்ளச்சாராய மரணம்:

2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட, கள்ளச்சாராயம் அருந்தியவர்களின் மரணம் தமிழ்நாட்டின் பெரும் அவலமாகும். இந்த சம்பவத்தில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால், 65 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர் ராஜா கண்ணப்பன்:

2022 மார்ச் மாதத்தில், ஒரு அரசு அதிகாரிக்கு எதிராக சாதி அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் போக்குவரத்து துறையிலிருந்து மாற்றப்பட்டு, பின்தங்கிய வகுப்புகள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பொன்முடி
பொன்முடி

பொன்முடி:

உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தை பயன்படுத்தும் பெண்களை ஓசி பஸ் எனப் பேசியதும், சைவம் மற்றும் வைணவம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், பெண்கள் மற்றும் இந்து மதக் கோட்பாடுகளை அவமதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி:

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புகளுக்காக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில், அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட பலர் மீது விசாரணை நடந்து வருகிறது.

2025-ம் ஆண்டு, தமிழ்நாட்டின் TASMAC-ல் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகள் எழுப்பியது. ஆனால் செந்தில் பாலாஜி, இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டது என மறுத்தார்.

செந்தில் பாலாஜி - உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி – உச்ச நீதிமன்றம்

இப்படியான முக்கிய குற்றச்சாட்டுகளையும் இந்த 4 வருட திமுக அரசு எதிர்க்கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாள்களே உள்ளதாள் களம் இப்போதே பரபரப்பாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *