
‘ஆப்பரேஷன் சிந்தூர்!’
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025
இந்நிலையில், இந்திய இராணுவம் ‘ஆப்பரேஷன் சிந்தூர்!’ என்ற மிஷனைக் கையிலெடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது அதிரடி தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
‘பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்!’
இதுசம்பந்தமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிகாலை 1:44 மணிக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய இராணுவம் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ எனும் மிஷனை முன்னெடுத்துள்ளது. அதன்வழி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் மீது தீவிரவாதத் தாக்குதலை தொடுக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.
மொத்தமாக 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம். எங்களின் இராணுவம் தெளிவாகத் திட்டமிட்டு குறிவைத்து இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறது பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்கள் எதுவும் இதில் தாக்கப்படவில்லை. மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காத வகையில்தான் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி 25 இந்தியர்களையும் ஒரு நேபாள் நாட்டவரையும் சுட்டுக்கொன்றதற்கான எதிர்வினைதான் இது. இந்தத் தாக்குதலை செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இன்றைய நாளில் பின்னர் விரிவாக கூறுகிறோம்.’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது.