
சென்னை: “தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (மே 5) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து பட்டியலின மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்த இரண்டு கார்களையும், இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்தும், ஒரு இருசக்கர வாகனத்தை அடித்து முற்றிலுமாக நொறுக்கியுள்ளனர்.