
”சாப்பிட நேரமில்லாதது; வேக வேகமா சாப்பிடுற இயல்பு; சாப்பிடுறதுல கவனத்தைச் செலுத்தி சாப்பிடாததுன்னு பல காரணங்களால நூத்துல 90 பேர் ஒருபக்கமா தான் மென்னு சாப்பிடுறாங்க.
பல வருடங்கள் இதுவே தொடர்கிறபட்சத்துல இதோட விளைவா கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி, சயாட்டிகா வரைக்கும் போகலாம்.
இப்படி ஒரே பக்கமா மென்னு சாப்பிட்டா, எந்தப் பக்கம் சாப்பிடுறீங்களோ அந்தப் பக்கம் தலையே சாய்ஞ்சுடலாம்”னு எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நியூரோ மஸ்குலர் ஆர்த்தோடொன்டிஸ்ட் (Neuromuscular Orthodontist) டாக்டர் செந்தில்குமார்.
அப்படின்னா, இன்னிக்கு பலபேருக்கு கழுத்து வலி வர்றதுக்கு ஒருபக்கமா மென்னு சாப்பிடுறதுதான் காரணமா டாக்டர் என்றதுக்கு, இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றபடி பேச ஆரம்பித்தார்.
”நாம தம்புல்ஸ் தூக்கி எக்ஸர்சைஸ் செய்யும்போது, ரெண்டு கையிலேயும் மாறி மாறி தூக்குவோம். அப்படிச் செய்யாம ஒரு கையால மட்டும் தம்புல்ஸ் தூக்கினா, ஒரு கை பலமாவும், இன்னொரு கை பலவீனமாவும் ஃபீல் பண்ணுவோம்.
இதே விஷயம்தான் ஒரே பக்கமா மென்னு சாப்பிடுறதுலேயும் நடக்குது. ஆனா, ஒரே பக்கமா மென்னு மென்னு அந்தப் பக்கமா நம்ம தலை சாய்ஞ்சிட்டா கூட இதை நாம உணரவே மாட்டோம்கிறதுதான் பிரச்னையே.
பொதுவா வாயோட ரெண்டு பக்கமும் உணவுப்பொருள்களைக் கடிச்சி சாப்பிடுறப்போ, அதனால ஏற்படுற தசைகளோட அசைவுகள் கழுத்தெலும்புகள்ல இருக்கிற சி1, சி2 எலும்புகள் வரைக்கும் போகும்.
ஆனா, ஒருபக்கமா மட்டும் மென்னு சாப்பிடுறப்போ, அதனால ஏற்படுற தசைகளோட அசைவுகள் கழுத்தெலும்புகள்ல இருக்கிற சி1, சி2 எலும்புகள் வரைக்கும் போகாது.
இதோட விளைவுகள்தான் ஒருபக்கமா தலை சாய்ஞ்சுப்போயிடுறது, தலை வலி, கழுத்து வலி, ஒற்றைத்தலைவலி எல்லாமே…

சரி, ஏன் பலரும் ஒருபக்கமா சாப்பிடுறாங்கன்னா, செளகர்யம்தான் காரணம். வலதோ, இடதோ, ஒருபக்கம் மட்டும் மென்னு சாப்பிடுறது அவங்களுக்கு வசதியா இருக்கும்.
அதுக்கு என்ன காரணம்னு பார்த்தீங்கன்னா, நம்மள்ல பல பேர் பல்லுல லேசா சொத்தை வந்துட்டாலே ‘ஒரு பல்லு தானே; பிடுங்கிடுங்க டாக்டர்’னு சொல்லிடுறாங்க.
ஒரு பல் எடுத்துட்டாலே, அந்தப் பக்கம் சாப்பிட வசதிப்படாம அடுத்தப் பக்கமாவே சாப்பிட ஆரம்பிப்போம். விளைவு, நான் மேலே சொன்னதெல்லாம் நடக்கும்.
இந்தப் பழக்கம் எப்போ ஆரம்பிச்சிருக்கும்னு சொன்னா ஆச்சரியப்படுவீங்க. ஆறு மாசத்துக்கு அப்புறம் ஒரு குழந்தை பருப்பு சாதம், தயிர் சாதம்னு சாப்பிட ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு வாயே சின்னதா இருக்கும். அதுக்குள்ள குட்டியா ஒரு நாக்கும் இருக்கும். இதையெல்லாம் கணக்குல எடுத்துக்காம, என் குழந்தை நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும்கிற ஒரே நோக்கத்துல, அம்மாக்கள் குழந்தைங்களோட வாய் நிறைய சாப்பாடு ஊட்டுவாங்க.
சில குழந்தைங்க துப்பிடும்; சில குழந்தைங்க அப்படியே முழுங்கிடும்; பல குழந்தைங்க அந்த சாப்பாட்டை வாயோட ஒருபக்கமா ஒதுக்கி வெச்சுக்கும்.
இந்தப் பழக்கமெல்லாம் மூளையோட நினைவுத்திறன்ல பதிவாகிடும். விளைவு, வளர வளர இந்தப் பழக்கங்கள் அப்படியே தொடர ஆரம்பிக்கும்.

உணவை வாயோட ஒருபக்கமா ஒதுக்கி வெச்சு, இன்னொரு பக்கம் மென்னு சாப்பிட்ட குழந்தை, வளர்ந்த பிறகும் அந்தப் பக்கம் மட்டுமே மென்னு சாப்பிடும். இளமை இருக்கிற வரைக்கும் இதனால எந்தப் பிரச்னையும் வராது.
ஏன்னா, உடம்பு தன்னைத்தானே ரிப்பேர் செஞ்சுக்கும். இது உடம்போட தசைகளுக்கும் பொருந்தும். ஆனா, வயசாக ஆக, மெல்லுகிற பக்கமா தலை சாயும். கூடவே நான் மேல சொன்ன எல்லா வலிகளும் வரிசையா வர ஆரம்பிக்கும்.
இப்படி வலி வந்தாலும், பெயின் கில்லர் மாத்திரை போட்டுட்டு வாழப் பழகிடுறாங்களே தவிர, பிரச்னைக்கான காரணம் என்னன்னு யாரும் யோசிக்கிறதே இல்ல”ன்னு வருத்தபடுற டாக்டர், இந்தப் பிரச்னையை தடுப்பதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.
”இந்தப் பிரச்னையைக் குழந்தையா இருக்கிறப்போவே கண்டுபிடிச்சி சரி செய்ய முடியுமான்னா, தாராளமா முடியும்.
5 வயசுல ஒரு குழந்தைக்கு ‘ஃபுல் மவுத் எக்ஸ்ரே’ எடுத்தா, பல்லோட அமைப்பு, தாடை எலும்போட அமைப்பு, அந்தக் குழந்தைக்குப் பற்கள் வரிசையா வருமா வராதான்னு அத்தனையையும் கண்டுபிடிச்சிடலாம்.
இந்த எக்ஸ்ரேவை, அந்தக்குழந்தையோட பற்களோட ஜாதகம்னே சொல்லலாம். இந்த எக்ஸ்ரேவுல பற்கள் வரிசையா வளராதுன்னு தெரிஞ்சிடுச்சுன்னா, அதுக்கேத்த மாதிரி டிரீட்மென்ட் கொடுக்கணும். கூடவே குழந்தையை எந்தப் பக்கமா உணவை மெல்லுதுன்னு கண்டுபிடிச்சு, எப்படி ரெண்டு பக்கமும் சாப்பிடணும்கிறதை டிரெயினிங்கும் கொடுப்போம்.

மேல் தாடையும் கீழ் தாடையும் ஃபிரீயா அசையும்னா, ரெண்டு பக்கமும் மென்னு சாப்பிடணும். இப்படி ரெண்டு பக்கமும் மென்னு சாப்பிடணும்னா பற்கள் வரிசையா இருக்கணும்.
வரிசைய இல்லைன்னா, ரெண்டு பக்கமும் மென்னு சாப்பிட முடியாது.
ஸோ, பற்களை ஜஸ்ட் லைக் தட் பிடுங்கக்கூடாது. வேற வழியே இல்லாம பிடுங்கினா, அந்த இடத்துல பல்லைக் கட்டிடணும். பற்கள் வரிசையா இருக்கணும். இல்லைன்னா ட்ரீட்மென்ட் கொடுத்து அதை வரிசைப்படுத்தணும்.
இவையெல்லாம் சரியா இருந்தா, நம்மோட ரெண்டு தாடைகளும் ஃப்ரீயா அசையும். தாடை ஃப்ரீயா அசைஞ்சா, அந்தப் பகுதி தசைகளெல்லாம் வலுவா இருக்கும்.
தசைகள் வலுவா இருந்தா கழுத்தெலும்புகள்ல எந்த பாதிப்பும் வராது. கழுத்தெலும்புகள்ல எந்த பாதிப்பும் இல்லைன்னா, முதுகு தண்டுவடமும் ஆரோக்கியமா இருக்கும்.
கழுத்தெலும்புகளும், தண்டுவடமும் ஆரோக்கியமா இருந்தா கழுத்துவலி, தலைவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, கால்வலி என எந்த வலியும் வராது.

‘எனக்கும் இந்தப் பிரச்னை இருக்குமோன்னு சந்தேகப்படுறவங்க, கண்ணாடி முன்னாடி நின்னுக்கோங்க. அப்படி நிக்கிறப்போ உங்க ரெண்டு பாதங்களும் ஒட்டி இருக்கணும்.
உடம்பு விறைப்பா வெச்சுக்காம, இயல்பா நில்லுங்க. இப்போ உங்க தலை, தோள்பட்டை சாய்ஞ்சிருக்கான்னு பாருங்க. அப்படி சாய்ஞ்சிருந்தா எந்தப்பக்கமா சாய்ஞ்சிருக்குன்னு கவனிங்க.
அதே பக்கம், கழுத்து வலி, தலைவலி மாதிரி ஏதாவது வலிகள் இருக்கான்னு கவனிங்க. அப்படி இருந்தா, உங்களோட தோற்ற அமைப்புல (posture) பிரச்னை இருக்குன்னு அர்த்தம்.
அதற்கு காரணம், நீங்க பார்க்கிற வேலை காரணமா இருக்கலாம். அல்லது நீங்க பல வருஷமா ஒரே பக்கம் மென்னு சாப்பிடுறதோட விளைவாகவும் இருக்கலாம்.
இதைக் கண்டுபிடிச்சு தொடர் பயிற்சிகள் மூலமா பிரச்னை தீர்த்துட்டா, உங்களோட உடம்புல இருக்கிற பல வலிகள் காணாம போயிடும்” என்கிறார் டாக்டர் செந்தில்குமார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs