
புதுடெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹமீத் ரசாக்கும் தேர்வாகி உள்ளார்.
சிங்கப்பூரில் சீனர்கள், மலாயர்கள், இந்தியர்கள் என வெவ்வேறு இன மக்கள் உள்ளனர். சிங்கப்பூர் மக்கள் தொகை சுமார் 60 லட்சம் ஆகும். இதில் சீனர்கள் 76, மலேசியர்கள் 15 மற்றும் இந்தியர்கள் 7.4 சதவீதங்களில் உள்ளனர். மலேசியர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில், சிங்கப்பூர் குழு பிரதிநித்துவ தொகுதி நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், தமிழ் பின்புலம் கொண்ட 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர். மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.