மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் கடந்த 2021-ல் இறந்து விட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து கடந்த நான்கு மாதங்களாக பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட உதயசூரியபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். மேலும் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வந்தனர்.

சரண்யா

இந்த நிலையில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் கடையை பூட்டிவிட்டு மீன் மார்க்கெட் சந்து வழியாக சரண்யா தனது வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது சந்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சரண்யாவில் கழுத்தில் வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்.பி ராஜாராம் விசாரணை மேற்கொண்டார். சரண்யாவின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சரண்யா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.

இது குறித்து விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட சரண்யா, பா.ஜ.கவில் மதுரை மாநகரத்தில் பொறுப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. பாலன் மதுரையில் இருந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். உதயசூரியபுரத்திற்கு வந்து செட்டில் ஆனவர்கள் அய்யனார் என்ற பெயரில் வெளிநாட்டுக்கு விசா எடுத்து தருவது உட்பட டிராவல்ஸ் மற்றும் சரண்யா என்ற பெயரில் ஜெராக்ஸ் கடைகளும் நடத்தி வந்தனர்.

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்த சரண்யா, தனது கணவர் பாலனுடன் சேர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சரண்யாவை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த கொலைக்கு முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என்பது போலீஸ் விசாரணை முடிவில் தெரிய வரும். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *