இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஒவ்வொரு விதமான தனித்துவத்தைக் கொண்டுள்ளன. அதையே அடையாளப்படுத்தி அந்த இடம் ஒரு பிரபலமான இடமாக கருதப்படுகிறது. அந்த வகையில் மிசோரமின் தலைநகர் ஐஸ்வால் இந்தியாவின் அமைதியான நகரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஐஸ்வால் நகரம் அன்றாட போக்குவரத்து மற்றும் சமூக நெறிமுறைகளை காரணம் காட்டி இந்தியாவின் அமைதியான நகரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ஐஸ்வால் நகரத்தில் அன்றாட போக்குவரத்து, பீக் ஹவர்ஸில்கூட சீராக இருக்குமாம்.

ஒருவரை ஒருவர் முந்தி செல்லாமல் இருப்பது, ஹாரன் அடிக்காமல் இருப்பது, போக்குவரத்தின்போது அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வது என மக்கள் இதனை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இடது பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி கோடுகள் உள்ளன. இடது மற்றும் வலது பாதைகளை பிரிக்க ஒரு டிவைடர்கூட இல்லை, வெள்ளை கோடுகள் மட்டுமே உள்ளது. ஆனாலும் அதையே சரியாக மதித்து வாகன ஓட்டிகள் பின்பற்றுகின்றனர்.

ஒருவேளை யாரேனும் அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முன்னாள் செல்லும் வாகனத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் சிறிய அளவில் ‘பீப்-பீப்’ ஒலி எழுப்புவது வழக்கம். இந்த சைகையை அவர்கள் எடுத்துக்கொண்டு அதற்கேற்றார்போல் தங்களது வாகனத்தை இயக்குகின்றனர்.

அமைதி என்பது சத்தம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, இது அந்த நகரத்தின் தனித்துவமான கலாசார மற்றும் சமூக நெறிகளின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

சாதாரணமான நேரமாக இருந்தாலும் சரி, பீக் ஹவர்ஸ் ஆக இருந்தாலும் சரி வாகன ஓட்டிகள் நிதானத்துடன் தங்களது வாகனங்களை கையாண்டு வருவது தான் இந்த நகரத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலே இந்த நகரம் அமைதியான நகரமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *