
UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவசப் பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி‘?’ என்ற தலைப்பில் கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற மே 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி முகாமில் கோவை சரக டி.ஐ.ஜி மருத்துவர் சசி மோகன் ஐ.பி.எஸ் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசே பயிற்சி வழங்குகிறது. மாணவர்கள் அரசு அல்லது அவர்களுக்கு விருப்பப்பட்ட பயிற்சி மையத்தில் இணைய வேண்டும். காரணம் அவர்களுக்கு சரியான வழிகாட்டல் தேவை.
ஆரம்பகட்ட முயற்சிகளில் மதிப்பெண் குறைவாக வந்துவிட்டது அல்லது தேர்ச்சியடையவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. அங்கிருந்து எப்படி அதிக மதிப்பெண் வாங்குவது குறித்து முறையாகத் திட்டமிட்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.

அதுவே கல்லூரி மாணவர்களாக இருந்தால், அவர்கள் மூன்றாவது ஆண்டில் இருந்தே பயிற்சியைத் தொடங்கலாம். முந்தைய வருடங்களின் வினாத்தாள்கள் மற்றும் பாடத்திட்டம் அடிப்படையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான மெட்டீரியல்ஸ்களையும் சேகரித்துக்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களில் உள்ள ஒவ்வொரு செய்தியையும் கவனமாக வாசித்து நடப்பு சம்பவங்களில் வலுவாக இருக்க வேண்டும். அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும். தினசரி ஏதாவது ஒரு வகையில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.
தேர்ச்சியானபோது நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும், சில நேரம் குறைவான மதிப்பெண்.. இன்னும் சில நேரம் மைனஸில் கூட வாங்கியிருப்போம். அங்கிருந்து எப்படி தகுதி பெறப் போகிறோம் என்பதுதான் முக்கியம். யோசித்தால் கடினமாக இருக்கும். ஆனால் படிப்படியாக முன்னேற்றத்தை கொடுக்க முடியும். வினாத்தாளில் ஒரு சில கேள்விகளுக்குத்தான் விடை தெரிகிறது என்றால், அதில் இருந்து 50-60 கேள்விகளுக்கு விடை தெரியும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

அதற்கு அடிப்படையான விஷயங்களை தமிழ்நாடு அரசு மற்றும் என்.சி.ஆர்.டி புத்தகங்கள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்வு குறித்து உரிய ஆலோசனையும் மேற்கொள்ள வேண்டும். படித்ததை தொடர்ந்து விரிவாக ரிவிஷன் செய்ய வேண்டும். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் மதிப்பெண் நிச்சயம் அதிகரித்து வெற்றி பெற முடியும். சராசரியாக ஒன்றரை ஆண்டிலேயே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை கண் கூடாக உணர முடியும்.” என்றார்.