
‘தேடுதல் வேட்டையில் சிஎஸ்கே!’
நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி முதல் அணியாக ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது. ஆனாலும், சீசனுக்கு இடையே பல இளம் வீரர்களையும் ட்ரையல்ஸூக்கு அழைத்து அணியில் சேர்த்துக் கொள்ளும் வேலையிலும் இறங்கியிருக்கின்றனர்.
இப்போது அணியில் ஆடி வரும் ஆயுஷ் மாத்ரேவையும் அப்படி சீசனுக்கு இடையே ட்ரையல்ஸூக்கு அழைத்துதான் அணிக்குள் சேர்த்துக் கொண்டார்கள். இந்நிலையில், இப்போது குஜராத்தை சேர்ந்த அதிரடி பேட்டரான உர்வில் படேலை சென்னை அணி ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது. யார் இந்த உர்வில் படேல்?
‘யார் இந்த் உர்வில் படேல்?’
26 வயதாகும் உர்வில் படேல் குஜராத்தை சேர்ந்தவர். ஓப்பனிங் பேட்டர். அதிரடியாக பெரிய பெரிய ஷாட்களை ஆடும் பாணியை கொண்டவர். கடந்த சையது முஷ்தாக் அலி டி20 தொடரில் குஜராத் அணிக்காக 6 போட்டிகளில் 315 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 229. இதில் ஹைலைட்டே அவர் அடித்த இரண்டு சதங்கள்தான்.

வெறும் 28 பந்துகளில் திரிபுராவுக்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருந்தார். டி20 இல் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் இதுதான். அதேமாதிரி, உத்தரகாண்டுக்கு எதிராக 36 பந்துகளில் ஒரு சதம் அடித்திருந்தார். ஐ.பி.எல் இன் மெகா ஏலம் முடிந்த பிறகு இந்த சதத்தையெல்லாம் அடித்திருந்தார். அதனால் துரதிஷ்டவசமாக ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த வாரத்தில் சென்னை அணி ஒரு சில உள்ளூர் வீரர்களை ட்ரையல்ஸூக்கு அழைத்து சோதித்துப் பார்த்திருக்கிறது.
அதில், உர்வில் படேல் ஆடியவிதம் சிஎஸ்கேவின் பயிற்சியாளர் குழுவுக்கு நம்பிக்கையை தர, அவரை கடந்த போட்டிக்கு முன்பாக காயமடைந்த வன்ஷ் பேடிக்கு பதில் ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது. உர்வில் படேல் ஒரு விக்கெட் கீப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை எனும் விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது சிஎஸ்கே முகாம் திடீரென இளம் வீரர்களை வலைவீசி தேடி அணிக்குள் கொண்டு வரும் வேலையில் இறங்கியிருக்கிறது. ஒரு அணி சீசனில் தங்களின் 12 வது போட்டியில் ஆடி முடிக்கும் வரைக்கும் ரீப்ளேஸ்மெண்ட் வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.