
தேசிய கல்விக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டு அரசை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஐந்தாண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது.
ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, அதன் மூலம் மறைமுகமாக சமஸ்கிருதத் திணிப்பு, குலக் கல்வி முறை போன்றவற்றைத் தேசிய கல்விக் கொள்கை உள்ளடக்கியிருப்பதாக தி.மு.க அரசு அதை ஏற்க மறுத்துவருகிறது.
ஏற்காவிட்டால் நிதி கிடையாது என, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து கல்விக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2,000 கோடியை பா.ஜ.க அரசு நிறுத்திவைத்து, ஏற்றுக்கொண்டால்தான் நிதி மிரட்டல் தொனியில் கூறிவருகிறது.
இத்தகைய சூழலில், டெல்லியில் சமஸ்கிருதம் தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். “வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம்.
“இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை” என்கிறோம்.” என்று அமித் ஷாவின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய பாஜக vs மாநில திமுக மோதல் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.