பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பா.ஜ.க தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அங்குள்ள மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்கு, மக்களை குழப்புவதை அவர்களின் ஒரு வியூகமாக வைத்துள்ளார்கள். அதில் உள்ள உண்மை மக்களுக்கு தெரிய வரும். இந்தியா கூட்டணி கட்சியினரின் தூக்கம் கெட்டுவிடும் என்று விழிஞ்ஞத்தில் துறைமுகம் திறப்புவிழாவில் பிரதமர் பேசியிருக்குறார். பிரதமர் வரும் நேரத்தில் எல்லா கட்சித் தலைவர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது புரோட்டக்கால். கேரளாவிற்கு செல்லும்போது கேரள முதல்வர் அந்த துறையின் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டது புரோட்டாக்கால். இதைக் கூட அரசியல் கண்ணோட்டத்தில் அவர் எண்ணுகிறார் என்றால் அவர் எண்ணத்தில் உள்ள குழப்பம் தான் காரணமாகும். அதனால் இந்தியா அணியில் எந்த குழப்பமும் வராது.

மனோதங்கராஜ்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மலை வளம், கடல் வளம் எல்லாம் மக்களுக்கு சொந்தமில்லை என்று கூறியுள்ளார். இது பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளார். பா.ஜ.க-வை பொறுத்தவரையில் மண் வளம், மலை வளம், கடல் வளம் எல்லாம் அதானிக்கும், அம்பானிக்கும் சொந்தம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனுடைய வெளிப்பாடாகத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசியுள்ளார்.

உழுபவர்களுக்கு நிலம் சொந்தம், அதுபோன்றுதான் கடலும். கடல் அரசாங்கத்திற்கு சொந்தம். அரசாங்கம் என்பது மக்கள் தான். மக்களாட்சி தத்துவத்தில் மக்கள் தான் அரசு. அதில் சில கட்டுப்பாடுகளை வைப்பதற்கு தான் அரசு உள்ளது. இந்த மண்ணையும் அதில் உள்ள பயன்பாட்டையும் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. விழிஞ்ஞம் துறைமுகமும், கன்னியாகுமரி துறைமுகமும் தனித்தனியானவை ஆகும். கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைத்தாலும் விழிஞ்ஞத்தில் துறைமுகம் வந்திருக்கும். விழிஞ்ஞம் துறைமுகத்தைப்பற்றி முதலிலேயே அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள்.

அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

மீன்பிடி துறைமுகம் தாருங்கள் என்று கேட்டோம்!

கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய கடல் வளத்தையும் முழுமையாக பயன்படுத்த வேண்டி மீன்பிடி துறைமுகம் தாருங்கள் என்று கேட்டோம். குமரி மாவட்டத்திற்கு பூகோள ரீதியாக ஒவ்வாத திட்டம்தான் சரக்குப்பெட்டக மாற்றுமுனைய திட்டம். எனவேதான் இந்த திட்டத்தை மக்கள் எதிர்த்தார்கள். சரக்கு பெட்டக மாற்றுமுனையும் அமைப்பதற்கு நீண்ட கடல் பகுதியும், மிக விரிவான நிலப் பகுதியும் தேவைப்படுகிறது. அந்த வகையில் காலியான கடல் பரப்பு நமது மாவட்டத்தில் இல்லை. எல்லாம் குடியிருப்புகள் பகுதி தான் உள்ளது.

கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக மாற்றுமுனையம் அமைக்க வேண்டும் என்பவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தையும், எண்ணுர் துறைமுகத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு பேச வேண்டும். மத்திய அரசு திட்டங்கள் தர வேண்டும் என விரும்பினால் 44 மீனவ கிராமங்களில், ஐந்து கிராமத்திற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து மீன்பிடி துறைமுகம் அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருகும். நமது மாவட்டத்தின் பொருளாதரமும் பெருகும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கொண்டுவர இந்த அரசு அனுமதிக்காது. கடலில் எரிவாயு எடுக்கும் விஷயத்தில் அரசின் நிலைப்பாடும் அதுதான். முதலமைச்சரிடம் இது தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளோம். மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற திட்டங்களை தி.மு.க ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *