ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இம்தியாஸ் அகமது மக்ரே, தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடந்த சனிக்கிழமை மக்ரேவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு தான் உதவியதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

மேலும், அந்த இடத்தை காண்பிப்பதாகவும் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இம்தியாஸ் அகமது மக்ரே வீடியோ காட்சியில் ஒரு புகைப்படம்

இதனையடுத்து, நேற்று காலை, மக்ரே, காவல்துறையினர் மற்றும் ராணுவப் படையினருடன் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைக் காட்டுவதற்காக காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால், அவர் நீந்த முயற்சித்தும், நீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதனால், அந்த ஆற்றில் மூழ்கி மக்ரே உயிரிழந்தார்.

‘பாதுகாப்புப் படையினர் அவரை ஏதோ செய்துவிட்டனர்’ என்று காஷ்மீரில் சில குரல்கள் எழுந்த நிலையில், மக்ரே ஆற்றில் குதித்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், மக்ரே தானாகவே ஆற்றில் குதிப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும், அவர் குதிக்கும்போது, காவல்துறையினர் அல்லது பாதுகாப்புப் படையினர் யாரும் அவருக்கு அருகில் இல்லை என்பது தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினர், “இது தொடர்பாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.

காஷ்மீர்

இந்த சம்பவத்துக்கு முன்னர், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, “குல்காம் ஆற்றில் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மோசமான செயலுக்கான கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது. இம்தியாஸ் மக்ரேவை பாதுகாப்புப் படையினர் இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்துச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதனையடுத்து, இன்று அவரது உடல் ஆற்றில் மிதந்து வந்தது” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *