
கோவை: சரிவர அகற்றப்படாமல் கோவை மாநகரில் சாலையோர திறந்தவெளிப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், 5,600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல், சாலைகளில் தேங்கியுள்ள குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினமும் 1,100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை, மாநகரின் பொது இடங்களில் அரை டன், ஒரு டன், இரண்டு டன் என வெவ்வேறு கொள்ளளவுகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன.