‘சென்னை தோல்வி!’

சென்னை அணி சின்னசாமியில் நடந்த போட்டியில் நெருங்கி வந்து பெங்களூருவிடம் தோற்றிருக்கிறது. கடந்த சீசனிலும் இப்படித்தான் பெங்களூருவுக்கு எதிராக சின்னசாமியில் நெருங்கி வந்து கடைசி ஓவரில் சென்னை அணி தோற்றிருக்கும். அப்போதும் சென்னைக்கு எதிராக கடைசி ஓவரை வீசி டார்கெட்டை டிபண்ட் செய்தது யாஷ் தயாள்தான். நேற்றும் கடைசி ஓவரை வீசி பெங்களூரு அணியை வெல்ல வைத்தது யாஷ் தயாள்தான்.

Yash Dayal

‘தொடர்ந்து சாதிக்கும் யாஷ் தயாள்!’

கடந்த சீசனில் நடந்த போட்டியில் சென்னையின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். நேற்று கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. இரண்டு சமயங்களிலும் சென்னை அணியின் ஆகச்சிறந்த பினிஷர்கள் என ரெக்கார்ட் வைத்திருக்கும் தோனியும் ஜடேஜாவும்தான் க்ரீஸில் இருந்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட அனுபவமிக்க இருவரை சின்னசாமி மாதிரியான பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருக்கும் மைதானத்தில் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், யாஷ் தயாள் அதை அநாயசமாக செய்திருக்கிறார். காரணம், அவருக்கு பின்னால் இருக்கும் வலியும் அவமானமும்தான்.

Yash Dayal
Yash Dayal

2023 சீசனில் யாஷ் தயாள் குஜராத் அணிக்காக ஆடியிருந்தார். அப்போது கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் யாஷ் தயாளுக்கு எதிராக ரிங்கு சிங் 5 சிக்சர்களை அடித்து போட்டியை வென்று கொடுத்திருந்தார். ஐ.பி.எல் இன் ஆகச்சிறந்த பினிஷ்களில் ஒன்று அது. ஆனால், ரிங்கு சிங் அடித்த அடியில் யாஷ் தயாள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உடைந்துபோனார்.

உடல் நலிவுற்று பல கிலோ எடையை இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் என நெருங்கிய வட்டத்துக்குள்ளேயே கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார். ரிங்கு சிங் அடித்த அடி அவரை முடக்கிப்போட்டது.

‘ஆர்சிபி கொடுத்த வாய்ப்பு!’

துவண்டு கிடந்தவருக்கு ஆர்சிபி வாய்ப்பை வழங்கியது. தனது கரியரை மாற்றி அமைத்துக்கொள்ள கிடைத்த இரண்டாம் வாய்ப்பை யாஷ் தயாள் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதன் ரிசல்ட்தான் கடந்த சீசனில் சென்னைக்கு எதிராக அவர் வீசிய கடைசி ஓவர்.

நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது இயான் பிஷப் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். ‘நான் யாஷ் தயாளை ஒரு ஷாப்பிங் மாலில் சந்தித்தேன். நானும் அவரும் கொஞ்ச நேரம் உரையாடினோம். இந்த சீசனில் நான் இன்னும் அவ்வளவு சிறப்பாக வீசவில்லை, எதாவது செய்ய வேண்டும் சார் என்றார்.

Yash Dayal
Yash Dayal

ரிங்கு சிங் உங்களின் ஓவரை அடித்த அந்த சமயத்திலிருந்தே நாங்கள் கமெண்டேட்டர்கள் எல்லாரும் உங்களுக்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறோம். உங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்றேன். ‘Yes Sir…Yes Sir…’ எனக் கூறிவிட்டு சென்றார். இதை இன்றைக்கு அசத்திவிட்டார்.’ என்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த காயம், யாஷ் தயாளுக்கு ஒரு வெறியைக் கொடுத்திருக்கிறது. அந்த சம்பவத்துக்கு பிறகு பெங்களூரு அணிக்காக யாஷ் 5 முறை கடைசி ஓவரை வீசியிருக்கிறார். 5 முறையும் ஆர்சிபியை வெல்ல வைத்திருக்கிறார்.

‘யாஷ் தயாள்தான் எங்களின் முக்கியமான பௌலர். டீம் மீட்டிங்கின் போதே அவர் போட்டிகளுக்கு தயாராக இருப்பார். ஒரு பேப்பரில் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார் என எழுதிக்கொண்டு வருவார். அதை அப்படியே களத்தில் செயல்படுத்த முனைவார். அவரால் டெத் ஓவர் அழுத்தங்களையும் தாங்க முடியும். அதனால்தான் அவரை ரீட்டெய்னும் செய்தோம்.’ என தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

RCB
RCB

யாஷ் தயாள் தோல்வியைக் கண்டவர். அது கொடுத்த வலியில் முடங்கிக் கிடந்தவர். அதிலிருந்து மீண்டு வந்து அவருக்கு கிடைத்திருக்கும் இரண்டாம் வாய்ப்பில் அசத்தி வருகிறார். ‘மீண்டெழுதல்!’ எனும் அனைவருக்கும் தேவையான ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் யாஷ் தயாள் தன்னுடைய ஆட்டத்தின் வழி கற்றுக்கொடுக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *