
‘சென்னை தோல்வி!’
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. அந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
‘ஆட்டநாயகன் ரோமாரியோ ஷெப்பர்ட்!’
பெங்களூரு முதலில் பேட்டிங் செய்த போது அந்த அணியின் சார்பில் ரோமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். அவரின் ஆட்டத்தால்தான் பெங்களூரு அணி 200+ ஸ்கோரை எட்டியது. அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ரோமாரியோ ஷெப்பர்ட் பேசியதாவது, ‘நான் பல நாள்களாக காத்திருந்தேன். இன்றைக்குதான் எனக்கான வாய்ப்பு கிடைத்தது. அணிக்காக சிறப்பாக செயல்பட்டு போட்டியை நன்றாக முடித்துக் கொடுக்க நினைத்தேன். என்னுடைய கால்களையும் பேட் ஸ்விங்கையும்தான் முழுமையாக நம்பியிருந்தேன். நின்ற இடத்திலிருந்தே திடகாத்திரமாக ஷாட்களை ஆடு என டிம் டேவிட்டும் எனக்கு அறிவுரை கூறினார்.

முதல் ஒன்றிரண்டு போட்டியில் எங்களின் பேட்டிங் கிள்க் ஆகவில்லை. அப்போது தினேஷ் கார்த்திக் எங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி ஒவ்வொருவருக்கும் பிரத்யேக பணிகளை வழங்கினார். அதற்கான ரிசல்ட்தான் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. நான் பேட்டிங் ஆட இறங்கிய போது ஸ்கோரை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஒவ்வொரு பந்தாகவே ஆட நினைத்தேன். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரியும் சிக்சருமாக மட்டுமே மாற்ற நினைத்தேன்.

பௌலிங்கில் நான் தொடர்ந்து சிரமப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். பௌலிங்கில் இது எனக்கான நாள் இல்லை.’ என்றார்.