
இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே உள்நாட்டுக் கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது.
எங்கு போர் நடந்தாலும் தவறுதான் என்றாலும், காஸா, உக்ரைனில் கூட வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
அந்த நாடுகளின் அரசால் அந்தப் போரை நிறுத்த எதுவும் செய்ய முடியவில்லை. உலக நாடுகள் தலையிட்டு அந்தப் போர்களை நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றன என மனதளவில் நாம் தேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நம் சொந்த நாட்டில் ஒரு சிறிய மாநிலத்தில் நடக்கும் கலவரத்தை நிறுத்தி, அந்த மாநில மக்களின் இயல்புநிலையை திரும்பவைக்க ஒரு அரசால் முடியவில்லை என்பதெல்லாம்… என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
மணிப்பூர் குறித்து வெளிவரும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் கணக்கில் வாராததை தவிர்த்து, அரசிடம் இருக்கும் கணக்கின்படி மட்டுமே 260 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1,500 பேர் காயமடைந்ததாக சொல்கிறது நிர்வாகம். சொந்த மாநிலத்திலேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 70,000க்கும் மேல்.

அத்தனைப் பேருக்கும் சொகுசான விடுதிகளா வழங்கியிருக்க முடியும்? நெரிசலான முகாம்களில் போதுமான இடவசதி இல்லாமல், கல்வியை இழந்த குழுந்தைகளுடன், தொழில் இல்லாமல், உறவினர்களை பிரிந்து என எத்தனை துன்பங்களை கடந்த இரண்டு வருடங்களாக அனுபவிக்கிறார்கள் இந்தியாவில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்கள்.
ஆட்சியாளர்கள் இல்லாததால், சரியான நிர்வாகம் இல்லாததால்தான் இதெல்லாம் நடக்கிறது என்றால் கூட பரவாயில்லை.
இந்தக் கலவரப்பிரச்னை தொடங்கும்போது மணிப்பூரில் ஆட்சியில் இருந்த, தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசால் இரண்டு வருடங்களாக மணிப்பூரில் இயல்பு நிலையை திரும்ப கொண்டுவர முடியவில்லை என்பதை நினைத்து மணிப்பூர் மக்கள் நொந்து கொள்கிறார்கள்.
ஆட்சியில் இருந்த பா.ஜ.க முதல்வர் என்.பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்து பிப்ரவரி 2024 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டப் பிறகும்கூட எந்த மாற்றமும் இல்லை என ஆதங்கப்பட்டு நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.
“நான் இம்பாலில் ஒரு வெற்றிகரமான பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்தேன். இப்போது எல்லாம் போய்விட்டது. வருமான ஆதாரமும் இல்லை. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இது எல்லாவற்றையும் விட, எங்கள் மாநிலத்தின் இயல்புநிலை எப்போது திரும்பும், எப்போது நாங்கள் சராசரி வாழ்க்கையை வாழத் தொடங்குவோம்? என்ற எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. இதெல்லாம் நடக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்கு தென்படவில்லை என்பதுதான் பெரும் துயரம்.” என்கிறார் முகாமில் வசிக்கும் ஜி. கிப்கென்.

பிஷ்ணுபூர் மாவட்ட முகாமில் வசிக்கும் மெய்தி இனத்தைச் சேர்ந்த அபுங், “என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இப்போது நான் வாழ்வதே என் குழந்தைகளுக்காகதான். என் குழந்தைகள் எதையெல்லாம் பார்க்கக் கூடாது என நான் நினைததேனோ அதையெல்லாம் பார்த்துவிட்டார்கள். எனது மிகப்பெரிய கவலை எனது இரண்டு சிறு குழந்தைகளின் எதிர்காலம்தான். முன்பு, என்னிடம் மளிகை வியாபாரம் இருந்தது. இப்போது எல்லாம் இழந்துவிட்டோம். எங்களுக்கான வீட்டில் வாழ்வதன் சுதந்திரமும், மகிழ்ச்சியும் மீண்டும் வேண்டும் என ஏங்குகிறோம்” என்கிறார்.
இம்பாலில் உள்ள முகாமில் வசிக்கும் அபேனாவ் தேவி, “எங்களுக்கு அரசும், அரசு சாரா நிறுவனங்களும் திறன் பயிற்சி அளிக்க முயற்சித்த போதிலும், எங்களின் மனநிலை சீராக இல்லை என்பதால் எங்கள் குழந்தைகளால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.
வன்முறை நடந்த அடுத்தடுத்த சில மாதங்களில், குறிப்பிடத்தக்க சமூக ஆதரவு இருந்தது. எங்களுக்கான உணவு உள்ளிட்ட சில அடிப்படை தேவைகளுக்கான ஏற்பாடுகள் சரியான நேரத்தில் கிடைத்தன. ஆனால் படிப்படியாக, நாங்கள் மறக்கப்பட்டோம். இப்போதெல்லாம் எங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மற்றவர்களின் கருணையை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இது அவமானமாக இருக்கிறது.” எனக் கண்ணீர் மல்க பேசினார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர், “இந்த இரண்டு ஆண்டுகால மோதலில், மிகவும் சிக்கலான மற்றும் கவலைக்குரிய அம்சம் ஆயுதக் குழுக்களும் அவர்களது கூட்டாளிகளும் அந்தந்த சமூகங்களைக் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர் என்பதுதான்.
சாதாரண மக்களின், குறிப்பாக இடம்பெயர்ந்தோரின் துன்பங்களைப் பற்றிய கவலையே இல்லாமல், அவர்கள் தங்கள் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வேலை இல்லாத, பாதுகாப்பாக உணராத சிலர் பணம் பறிப்பு போன்ற குற்றங்களிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
செயலிழந்த பல போராளி அமைப்புகள் புத்துயிர் பெற்றுள்ளன. அந்த அமைப்புகளில் வேலையில்லாத, குறைந்த கல்வியறிவு பெற்ற இளைஞர்களை சேர்த்துவருகின்றனர். வன்முறையைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
ஆனால் இயல்புநிலை திரும்புவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால், பொதுமக்களின் விரக்தி அதிகரிக்கிறது. இரு சமூகங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பங்களின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறார்கள். கடுமையான உளவியல் துயரத்துடன் போராடுகிறார்கள்” என்றார்.
“மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானபோது, மணிப்பூர் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, அதற்குப் பிறகு அந்த மாநிலம் குறித்து எதுவும் பேசவே இல்லை என்பது வேதனைக்குரியது. மணிப்பூரில் பலியான 260 உயிர்கள் மீது அக்கறை காட்டினால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் ” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Source: Two years of manipur conflict: thousands wait to go home