
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்தார். பிரதமரின் இல்லத்தில் சனிக்கிழமை (மே 3) நடந்த இந்தச் சந்திப்பில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் மோடி உடனான இந்தச் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாக தேசிய மாநாடு கட்சி எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதல் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என்றும், இது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.